பாட்டாளி மக்கள் கட்சியில், டாக்டர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி இடையே சுமூக நிலை ஏற்பட்டு ஒற்றுமை உண்டாகவும், தமிழகத்தில் பா.ம.க வலுப்பெற்று தேர்தலில் வெற்றியடைய வேண்டியும் சூரியனார் கோவிலில் பா.ம.க-வினர் சிறப்பு யாகம் நடத்தினர்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவரான அன்புமணி ஆகியோருக்கு இடையேயான நாளுக்கு நாள் மோதல், அதிகரித்து வருவது, பா.ம.க வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. தந்தை, மகன் இடையே ஏற்பட்ட வெளிப்படையான உரசல் பா.ம.க முதற்கட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரையும் கவலையில் ஆழ்த்தின. அத்துடன் இருவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸைச் சந்தித்ததும் பேசு பொருளானது. விரைவில் இருவரது மோதலுக்குச் சுபம் போடப்படும் எனவும் தகவல்கள் வெளிவருகின்றன. இதனிடையே, பா.ம.க-வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சி சேர்மனுமான ஸ்டாலின் ராமதாஸும் - அன்புமணியும் இணைவதற்கும், ஒற்றுமையுடன் இருப்பதற்கும் மங்கள ஆதித்ய மகா யாகம் நடத்தியுள்ளார்.
நவக்கிரக்கோயில்களில் ஒன்றான கும்பகோணம் சூரியனார்கோவில் கிராமத்திலுள்ள, சிவசூரியபெருமான் கோவிலில் நடைபெற் இந்த யாகம், பா.ம.க வட்டத்தில் பேசிப் பொருளாகியிருக்கிறது. ஸ்டாலின் தலைமையில் கோயிலுக்கு வந்த கட்சியினர் யாக பூஜையில் அமர்ந்து பூஜை செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகை பொருட்களைக் கொண்டு இந்தச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. கோவிலில் மங்கள வாத்தியங்கள் முழங்க, பிரகாரத்தில் வலம் வந்து மூலவர் சிவசூரியபெருமான் உள்ளிட்ட நவக்கிரகங்களுக்குக் கலசங்களிலிருந்த புனித நீரில் சிறப்பு அபிஷேகம் செய்து மகா ஆரத்தி செய்யப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/06/10/pmk-yagam1-966417.jpg)
இந்த வழிபாடு செய்தால் பிரிந்தவர்கள் சேர்ந்து சண்டை சச்சரவு நீங்கி ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்பது ஐதீகம் என்கிறார்கள். இது குறித்து ஸ்டாலின் கூறுகையில், ஆதித்ய ஹோமம் என்பது சவால்களை வெல்லலாம் மற்றும் சூரிய கடவுளின் கதிரியக்கச் சக்திகளால் வழிநடத்தப்பட்டு ஆன்மீக விடுதலை நிலையை அடையலாம் என்பது ஐதீகம். இதனால், ராமதாஸ், அன்புமணி இருவருக்கும் இடையே சுமுக நிலை ஏற்படவும், தமிழகத்தில் பா.ம.க வலுப்பெற்று தேர்தலில் வெற்றியடைய வேண்டியும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இது மிகப்பெரிய மாற்றத்தைத் தரும் என்ற நம்பிக்கை பா.ம.க-வினர் மத்தியில் உள்ளது என்றார்.
க.சண்முகவடிவேல்