Tamilnadu News Update : தேர்தல் சமயத்தில் திமுகவினரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த இவர், சமீபத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ராயபுரம் பகுதியில் உளள ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி திமுகவினர் சிலரை அரைநிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினரை கைது செய்தனர். இவர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஜாமீன் கேட்டு ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஜெயக்குமார் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் 5 கோடி மதிப்புள்ள தனது தொழிற்சாலையை தன்னை மிரட்டி அபகரித்துக்கொண்டதாக மகேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகரின் அடிப்படையில் சென்னை குற்றப்பிரிவு போலீசார், கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல், குற்றத்தை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஜெயக்குமார் மகள் மற்றும் மருமகன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil