Tamilnadu News About Seeman : கடந்த 1997-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான நகமண்டலா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. தொடர்ந்து, 1998-ம் ஆண்டு வெளியான பூந்தோட்டம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்து ப்ரண்ஸ், கலகலப்பு, மிலிட்டரி, பாஸ் என்கிற பாஸ்கரன் தில்லாலங்கடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சென்னையில் செட்டில் ஆன இவர், கடந்த 2020 ம் ஆண்டு அதிகளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது தொடாபாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவான்மையூர் போலீசார், விஜயலட்சுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பிறகு மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், உடல் நிலை சரியில்லாத நிலையிலும் சிலரின் தூண்டுதல் காரணமாக என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிவிட்டனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்காக ஹரி நாடார் தன்னை மிரட்டுவதாகவும், இது தொடர்பாக சீமான், ஹரி நாடார், மற்றும் சதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் இந்த புகார் மனு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை என்று பலராலும் அறியப்பட்ட ஹரி நாடார், நெல்லை மாவட்டம் இலந்தைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர். தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள அவர், பனங்காட்டுப்படை என்ற கட்சியில் முக்கிய பதவி வகித்து வருகிறார். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடம் பெற்றார்.
இந்நிலையில், வட்டி தொழில் செய்து வந்த ஹரி நாடார், சமீபத்தில் பட தயாரிப்பில் புகுந்தார். அவரே நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்திற்கு பூஜை போட்ட நிலையில், பெங்களூரை சேர்ந்த வெங்கடராமன் சாஸ்திரி உள்ளிட்டோரிடம் கடன் தருவதாக 16 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு பெங்களூர் போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரி நாடார் பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கபபட்டார்.
பெங்களூரில் பதிவான வழக்குக்கு ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் விஜயலட்சுமி கொடுத்த புகாரை தற்போது திருவான்மையூர் போலீசார் தூசு தட்டியுள்ளனர். விஜயலட்சுமி புகாரின் பேரில், ஹரி நாடார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக 506 (1) 506 ஆகிய பிரிகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹரி நாடாரை கைது செய்ய பெங்களூர் போலீசாருக்கு தமிழக போலீசார் கடிதம் எழுதினர்.
தற்போது இதற்கு சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறைக்கு சென்ற திருவான்மையூர் போலீசார் ஹரி நாடாரை கைது செய்தனர். தொடர்ந்து திரைத்துறை நடவடிக்கைகளை முடித்த பின் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹரி நாடாரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில், சீமான தூண்டுதலின் பேரில், ஹரிநாடார் சதா ஆகியோர் மிரட்டியதாக கூறியுள்ளார். இதில் தற்போது ஹரி நடார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக சீமான் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது மேலும் ஹரிநாடாரை காவலில் எடுத்து விசாரித்த பின்னர் திருவான்மையூர் போலீசார் சீமானிடமும் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil