புதுச்சேரி மாநிலம், வில்லியனுாரில் இருந்து வானுார் பூத்துறை வழியாக வேனில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பூத்துறை சாலையில் நேற்று தமிழக போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். வில்லியனுாரில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்ரோடு நோக்கி வந்த ஈச்சர் வேனை மடக்கி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வேனில் தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் மதுபானம் பெயரில், போலி மதுபானம் தயாரித்து அதில் ஸ்டிக்கர் ஒட்டி, ஏராளமான பெட்டியில் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. வேன் டிரைவரை பிடித்து விசாரித்தபோது, திருச்சி கருமண்டபம் சமத்துவ நகரை சேர்ந்த சின்னசாமி மகன் கருத்தபாண்டி(40) என்பது தெரியவந்தது. இந்த கடத்தல் மதுபானம் கொண்டு செல்லும் வழியை காட்ட வேனுக்கு முன்னால் சொகுசு காரில் சிலர் சென்றுள்ளனர்.
அவர்கள், சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த ராமநாதபுரத்தை சேர்ந்த சிதம்பரம் மகன் சித்திக், மரக்காணம் அனுமந்தை செட்டிக்குப்பம் ராஜசேகர், புதுச்சேரி கோரிமேடு வீமன் நகர் சேர்ந்த பால்ஜோஸ், புதுச்சேரி, கொம்பாக்கம் கண்ணாயிரம் மகன் பிரபு, ஆகியோரை பிடித்தனர். விசாரணையில், அனுமந்தை சக்திவேல், அவரது உறவினரின் மூலம், வில்லியனூர் உளவாய்க்காலில் போலி மதுபான தொழிற் சாலை அமைத்து, போலி டாஸ்மாக் மதுபானம் தயாரித்து, சென்னை வண்டலூர் பகுதிக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதனை அடுத்து இந்த கடத்தலில் ஈடுபட்ட கருத்தபாண்டி, சித்திக், பால்ஜோஸ், ராஜசேகர், பிரபு ஆகிய 5 பேரை கைது செய்தனர். வேனில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள, 'எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல்' என்ற பெயரில் அச்சிடப்பட்ட 10,032 போலி குவாட்டர் பிராந்தி பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய ஈச்சர் வேன், ரூட் பார்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட டாடா இண்டிகோ கார் பறிமுதல் செய்து, ஆரோவில் போலீசில் ஒப்படைத்தனர்.
கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., உமாதேவி பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுபாட்டில்களை பார்வையிட்டு, போலீசாரை பாராட்டினார். ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சக்திவேல் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராஜசேகர் அளித்த தகவலின் பேரில், ஆரோவில் காவல் ஆய்வாளர் கமலஹாசன் தலைமையில் போலீசார், வில்லியனுார் அடுத்த உளவாய்க்கால் பகுதியில் கடந்த ஒரு வாரங்களாக செயல்பட்டு வந்த போலி மதுபான தொழிற்சாலையில் சோதனை நடத்தினர்.
தமிழக டாஸ்மாக் மதுபானம் பெயரில் அச்சிடப்பட்டிருந்த லேபிள்கள், காலி பாட்டில்கள், மூடி, காலி அட்டை பெட்டிகள், மதுபானம் தயாரிக்கும் இயந்திரம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த இடம் புதுச்சேரி அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மகளுக்கு சொந்தமான இடம் என்பது தெரியவந்தது. அனுமந்தை சக்திவேலின் உறவினர் மூலம் பிளாஸ்டிக் அறைப்பதற்கு இடத்தை வாடகைக்கு எடுத்து, போலி மதுபான ஆலை நடத்தி வந்தது தெரியவந்தது.
போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய இயந்திரம், காலிபாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே இடத்தில் கடந்த சில மாதத்திற்கு முன்பு, சந்தன எண்ணெய் தயாரிப்பதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த டன் கணக்கிலான சந்தன மரக்கட்டை துகள்களை தமிழக வனத்துறையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்