காவலர் நலன், பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக 5-வது காவல் ஆணையம் 1,200 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
காவல்துறையினர், பணியிலும் பணியிடத்திலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சிலர் பணி மற்றும் குடும்பத்தில் சமநிலையை மேற்கொள்ள முடியாமல், சோர்வடைந்து மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க காவல்துறையினருக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, ‘காவலர் - பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களுக்குத் தேவையான திட்டங்களையும், புதிய பயிற்சி முறைகளையும் பரிந்துரைக்கும் நோக்கத்துடனும் ‘காவல் ஆணையம்’ (5-வது) ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ல் தொடங்கினார்.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைவராகவும், அலாவுதீன் ஐஏஎஸ் (ஓய்வு), முன்னாள் டிஜிபியான கே.ராதாகிருஷ்ணன், ஐபிஎஸ் (ஓய்வு), மனநல மருத்துவர் சி.ராமசுப்பிரமணியம், முன்னாள் பேராசிரியர் நளினி ராவ் ஆகியோர்கள் உறுப்பினர்களாகவும், காவல்துறை கூடுதல் டிஜிபி (தற்போது டிஜிபி) மகேஷ்குமார் அகர்வால், உறுப்பினர்-செயலராகவும் நியமிக்கப்பட்டனர்.
சென்னை அசோக் நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் இந்த காவல் ஆணையம் ‘காவல் துறையையும், காவலர்களையும் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த தகவல்களை திரட்டியது. வாரத்துக்கு 2 முதல் 3 நாட்கள் கூடி ஆலோசித்தது. குறிப்பாக கிராமம், நகரம், மாநகர காவல் நிலையங்களின் செயல்பாடு எவ்வாறு உள்ளது, அவற்றை மேம்படுத்துவது எப்படி என்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகளிடம் அறிக்கை பெற்று ஆராய்ந்தது.
ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் காவலர்களின் நலன்களோடு, அவர்களது பணித்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் தகவல்களை திரட்டி பரிந்துரைகளை தயார் செய்திருந்தது. பொது மக்களிடம் போலீஸார் எவ்வாறு கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
திறமையான காவலர்களை தேர்வு செய்ய தேர்வு வாரியத்தில் என்ன மாற்றம் செய்ய வேண்டும். பெண் காவலர்களின் பிரச்சினைகளை தீர்வு கண்டு, அவர்களை எவ்வாறு வளர்ச்சி அடைய செய்வது, காவல் நிலைய மரணங்களை எவ்வாறு முற்றிலும் தடுப்பது, என்கவுன்ட்டர் நிகழ்வுகள் ஆகியவை குறித்தும் விரிவாக ஆராய்ந்து அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. சைபர் குற்ற தடுப்பு குறித்தும் விளக்கி உள்ளது.
காவலர்கள் முதல் டிஜிபி வரையிலான அதி காரிகள் மட்டும் அல்லாமல் மக்களிடமும் கருத்துகளை பெற்றது. போலீஸாரின் பொறுப்பு, நற்பெயரை எவ்வாறு பெறுவது, கடமை என்ன, பத்திரிகையாளர்கள் காவல்துறை உறவு, சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள்வது, கண்காணிப்பது, லாக்கப் மரணத்தை தடுப்பது என்பது உட்பட பல்வேறு காரணிகள் குறித்து விரிவாக அறிக்கை தயார் செய்து, தீர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி 60 தலைப்புகளில் 1,200 பக்கங்களில் இந்த விரிவான அறிக்கை தயார் செய்து கடந்த 3-ம் தேதி அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில், ஏற்றுக் கொள்ளக் கூடியவை குறித்து அரசு விரைவில் உத்தரவாக பிறப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“