தி.மலையில் ரோந்து பணியில் இருந்தபோதே அட்டூழியம்: கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் 2 போலீசார் கைது

திருவண்ணாமலை காவல் நிலையத்தில் பணிபுரிந்த சுரேஷ் ராஜ் மற்றும் சுந்தர் என்ற இரண்டு காவலர்கள், ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைக் கடத்தி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை காவல் நிலையத்தில் பணிபுரிந்த சுரேஷ் ராஜ் மற்றும் சுந்தர் என்ற இரண்டு காவலர்கள், ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைக் கடத்தி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
tiruvannamalai harassment

திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு காவலர்கள், ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைக் கடத்தி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதன் பேரில், இந்த வாரம் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை எண்டல் புறவழிச்சாலை அருகே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

சம்பவத்தின் பிண்ணனி

குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலர்கள் சுரேஷ் ராஜ் மற்றும் சுந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணியில் இருந்த இவர்கள், ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து அண்ணாமலையார் திருக்கோயிலுக்குப் பயணப்பட்ட சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அந்த வாகனத்தில் உறவினர்களான இரண்டு பெண்கள் இருந்துள்ளனர்.

விசாரணையின்படி, காவலர்கள் இருவரும் வாகனத்தில் இருந்த பெண்களை ‘வழக்கமான வாகனச் சோதனை’க்காக கீழே இறங்கும்படி உத்தரவிட்டனர். பின்னர், இளம் பெண்ணை பலவந்தமாக தனியாகப் பிரித்து, அருகிலுள்ள தோப்பிற்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த கொடூரச் சம்பவம் மற்றொரு பெண்ணின் கண்முன்னே நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில், காவலர்கள் அந்தப் பெண்களை சாலையோரம் விட்டுவிட்டுச் சென்றனர். அருகில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றுபவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அவர்களைக் கண்டு, 108 ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் அளித்தனர். பாதிக்கப்பட்ட பெண் திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.

Advertisment
Advertisements

விரைவான கைது நடவடிக்கை

திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து, கடத்தல் மற்றும் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சில மணிநேரங்களிலேயே குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும், இவர்கள் இருவரும் முழுமையான விசாரணை நிலுவையில் உள்ளதால், பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் சரக டி.ஐ.ஜி. ஜி. தர்மராஜன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. எம். சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, உள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அரசியல் தலைவர்கள் கண்டனம்

இந்த கொடூரச் சம்பவம் தமிழக அரசியலில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “இது கொடூரமானது – மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளதன் உச்சம் இது” என்று சாடினார்.

“தெருவில் உள்ள குற்றவாளிகளால் அல்லாமல், பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளாலேயே இத்தகைய அட்டூழியம் இழைக்கப்படும்போது, இந்த பொம்மை முதலமைச்சரிடம் என்ன பதில் இருக்கிறது? தி.மு.க. அரசு தலைகுனிய வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

அ.தி.மு.க. வெளியிட்ட அறிக்கையில், திருவண்ணாமலை தாக்குதல் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும், தமிழகம் முழுவதும் குறைந்தது 19 பாலியல் குற்ற வழக்குகளில் போலீஸ் பணியாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக, பெண்களைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்த படைகளே பயங்கரவாதத்தின் மூலமாக மாறியுள்ளன,” என்று கூறி, உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலையும் இதேபோன்ற கோபத்தை வெளிப்படுத்தினார். “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதால், காவல் துறை அதிகாரிகள்கூட பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டியுள்ளது” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார். “உள்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைகுனிய வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Sexual Harassment Tiruvannamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: