மங்களூரு ஆட்டோ வெடித்த சம்பவத்தில், ஆட்டோவில் பயணித்த நபருக்கு ஊட்டியைச் சேர்ந்தவர் சிம்கார்டு வாங்கி கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சனிக்கிழமை, மங்களூருவில் ஓடும் ஆட்டோ ரிக்ஷா வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டு கடும் புகை பரவியது. இதில், ஓட்டுநர் மற்றும் பயணி தீக்காயம் அடைந்தனர். இந்தநிலையில், குண்டுவெடிப்பு தற்செயலானது அல்ல. ஆனால் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒரு பயங்கரவாத செயலாக இது உள்ளது. கர்நாடக மாநில காவல்துறை, மத்திய அமைப்புகளுடன் இணைந்து இது குறித்து ஆழமாக விசாரணை நடத்தி வருகிறது என கர்நாடக காவல்துறை தெரிவித்தது.
இதையும் படியுங்கள்: தமிழக அரசு வேண்டாம் என எழுதிக் கொடுத்தால், டேன்டீ நிறுவனத்தை மத்திய அரசு ஏற்க தயார் – அண்ணாமலை
இதனிடையே, மங்களூரில் ஆட்டோ வெடித்த சம்பவ இடத்தில், 4 பேர் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து தடயவியல் துறையினர் முக்கிய ஆதாரங்களை சேகரித்தனர்.
இந்தநிலையில், ஆட்டோவில் பயணம் செய்தவர், கோவையில் சிம் கார்டை பெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆட்டோவில் பயணித்த நபருக்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த நபர் சிம்கார்டு வாங்கி கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிம் கார்டு வாங்கி கொடுத்த நபரைப் பிடித்து தமிழக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட ஆட்டோவில் பயணம் செய்த நபர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே, மைசூரில் தங்கியதும், 10-க்கும் மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் தங்கி இருந்த வாடகை அறையில் சில பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
இதற்கிடையில், மங்களூரு ஆட்டோ வெடிப்பு சம்பவம் தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் தமிழகம்- கர்நாடகா எல்லையில், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil