சென்னை மெரினாவில் காவலர்களை தரக்குறைவாக பேசிய ஜோடி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைதானவர் மன்னிப்புக் கேட்கும் வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை மெரினா லூப் சாலையில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்தது. காரில் ஒரு ஆண் மற்றும் பெண் இருந்தனர். இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் கடற்கரையை நோக்கி செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கடற்கரைக்கு செல்ல தற்போது அனுமதி இல்லை என்றும், இங்கிருந்து செல்லுமாறும் கூறினர்.
அப்போது அவர்கள் இருவரும் போலீசாரை தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளனர். குறிப்பாக, காவலர்களை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இருவரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் தரக்குறைவாக பேசியதை போலீசார் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையடுத்து, தரக்குறைவாக பேசியவர்கள் மீது காவலர் சிலம்பரசன், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆபாசமாக பேசுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர்களின் கார் பதிவு எண்ணை வைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தரக்குறைவாக பேசிய நபர் வேளச்சேரியை சேர்ந்த சந்திரமோகன் என்பதும், அவரது தோழி மயிலாப்பூரை சேர்ந்த தனலட்சுமி என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில், இருவரையும் வேளச்சேரி தனியார் விடுதியில் வைத்து போலீசார் தற்போது பிடித்துள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சந்திரமோகன் மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்றை போலீசார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
போலீசார் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், "என் பெயர் சந்திரமோகன். நான் வேளச்சேரியில் வசித்து வருகிறேன். நேற்று எனது தோழியுடன் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு காரில் வந்தேன். இரவு 12 மணியளவில் நானும், எனது தோழியும் காரில் இருந்து வெளியே சாப்பிட செல்வதற்காக நின்றுகொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த போலீசார் எல்லாரையும் போக சொன்னதால் கோபத்தில் அப்படி பேசிவிட்டேன். தரக்குறைவாக பேசினேன். நான் மது அருந்தியிருந்ததால் அப்படி பேசிவிட்டேன். இனி காவல்துறையை தவறாக பேசமாட்டேன். நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்." இவ்வாறு அந்த வீடியோவில் சந்திரமோகன் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“