scorecardresearch

ரூ38 கோடியில் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படுகிறது; ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

தமிழ்நாடு முழுவதும் 1578 காவல் நிலையங்களில் தரமான சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படுவதற்காக 38.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு; 12 மாதம் முதல் 18 மாதங்கள் வரையிலான காட்சிகளைச் சேமிக்கும் வகையிலான அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்

ரூ38 கோடியில் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படுகிறது; ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி 2 வாரங்களில் தொடங்க உள்ளது என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நான் வைத்திருக்கும் கடையை காலி செய்ய வேண்டும் என்ற விவகாரம் தொடர்பாக திடீர் நகர் காவல் நிலையத்தில் சிசிடிவி பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றித் தர வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இதையும் படியுங்கள்: சனாதனத்தின் மையப் புள்ளி தமிழகம்: ஆளுனர் ஆர்.என் ரவி

இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி, திடீர் நகர் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த விசாரணையின் போது காவல் நிலைய சிசிடிவி கேமரா ஆய்வு செய்யப்பட்டதில் நீதிபதிகள் குறிப்பிட்ட பதிவுகள் அதில் இல்லை. இதுகுறித்து நீதிபதி கேள்வி எழுப்பியப்போது, காவல் நிலையத்தில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகள் 15 நாட்கள் மட்டுமே சேமிக்க முடியும் என திடீர் நகர் காவல் ஆய்வாளர் பதில் மனுத் தாக்கல் செய்தார். இதனையடுத்து, இதுகுறித்து மதுரை மாநகர் காவல் ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறை சிறப்புச் செயலர் ஆனந்தகுமார் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் 1578 காவல் நிலையங்களில் தரமான சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படுவதற்காக 38.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 12 மாதம் முதல் 18 மாதங்கள் வரையிலான காட்சிகளைச் சேமிக்கும் வகையிலான அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் பணி இரண்டு வாரத்தில் தொடங்க உள்ளது” என தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu police stations gets high standard cctv cameras

Best of Express