நவம்பர் மாதம் ஒரே வாரத்தில் சுமார் 1500 பேர் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோக்களை டவுண்லோட் செய்துள்ளதாகவும் அவர்களைக் கண்டுபிடித்து விரைவு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித் தருவோம் என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக சைபர் க்ரைம் போலீசார் கண்டறிந்து அளித்த புள்ளி விபர அடிப்படையிலான தகவல்களை வெளியிட்ட, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி, “நவம்பர் மாதத்தில் ஒரே வாரத்தில் குறைந்தபட்சம் 1500 பேர் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை டவுண்லோட் செய்துள்ளனர். அவர்களின் ஐபி முகவரி கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கி உள்ளது. இந்த ஆபாச வீடியோக்கள் வாட்ஸ்ஆப் அல்லது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செல்போன் அல்லது லேப்டாப்பில் dark web அல்லது விபிஎன் மூலம் இணையத்தை பயனப்படுத்தினால் தங்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்களிடம் பிரத்யேக சைபர் லேப் உள்ளது. அதன் மூலம் சில தொழில்நுட்பங்களைக் கொண்டு எங்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும். இது போல, ஆபாச வீடியோக்களை டவுண்லோட் செய்பவர்கள் மற்றும் பகிர்பவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, அவர்களுடைய ஐபி முகவரியை டிஜிட்டல் ஆதாரமாகக் கொண்டு விரைவு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தர உள்ளோம்.
அதனால், யாரும் இது போன்ற வீடியோக்களை பகிர்வோரை ஊக்குவிக்க வேண்டாம் என பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம். ஐதராபாத் சம்பவம் போன்ற சம்பவம் தமிழகத்தில் நடந்து விடக் கூடாது என்பதற்காக கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
பெண்கள் தங்களின் பாதுகாப்பிற்காக அவர்களுடைய செல்போன்களில் காவலன் செயலியை டவுண்லோட் செய்து பயன்படுத்தும் படி கேட்டுக் கொண்டுள்ளனர். இது ஆபத்து காலங்களில் அவர்களுக்கு உதவும் என தெரிவித்துள்ளார்.