பண்டிகை காலத்தின்போது நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து செய்தி செய்தி வெளியிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்கள் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி
"அன்பின் திருஉருவம், கருணையின் மறுவடிவம், தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்றுவிட்டால், இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை என்ற இயேசுபிரான் அவர்களின் போதனைக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதரும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், அவர்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
இயேசுபிரானின் போதனைகளை அனைவரும் கடைபிடித்தால், நாம் விரும்பியதை இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், கிறிஸ்தவப் பெருமக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களுக்கு பல்வேறு நன்மைகள் செய்யப்பட்டுள்ளது என்பதை பெருமையோடு நினைவுகூர விரும்புகிறேன்.
கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து, நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் அன்பு காட்டி, இறைவனின் தூதுவராக, கருணையின் வடிவமாக விளங்கிய இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்
"அன்பின் உருவமாகவும், கருணையின் வடிவமாகவும் விளங்கும் இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்று எடுத்துரைத்த இயேசுபெருமான் அவதரித்த தினத்தை, கிறிஸ்தவ பெருமக்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, அதனை வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து, வாசலில் நட்சத்திரங்களைக் கட்டி, புத்தாடை உடுத்தி, இறைவனை வழிபட்டு, விருந்தினர்களுடன் இனிய உணவு உண்டு, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
அன்பின் சிறப்பை, அன்பின் வலிமையை உலகிற்கு எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த நாளன்று நாமும் அன்பை விதைப்போம், அன்பால் உலகை ஆள்வோம். அவர் போதித்த தியாகம், இரக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற உயரிய வாழ்க்கை நெறிகளை பின்பற்றி சகோதரத்துவத்துடன் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்.
அனைவர் வாழ்விலும் அமைதியும், ஆனந்தமும் தவழட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்! செல்வம் செழிக்கட்டும்! அமைதி நிலவட்டும்! என்று வாழ்த்தி அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அன்பின் உருவமாகவும் கருணையின் வடிவமாகவும் விளங்கும் இயேசு பிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! #MerryChristmas pic.twitter.com/NHNUaN4d72
— O Panneerselvam (@OfficeOfOPS) December 24, 2022
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர்
"அன்பையும் பொறுமையையும் மனித சமுதாயத்திற்கு போதித்த இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆசியக் கண்டத்தில் உள்ள பெத்லகேமில் பிறந்து உலகெங்கும் அன்பின் நற்குணத்தை போதித்தவர் இயேசுநாதர். "அன்பு கொள்ளாதவர் கடவுளை அறியாதவர். ஏனெனில் அன்பே கடவுள்" என்பது போன்ற இயேசுபிரானின் நல்வார்த்தைகள், மக்களின் மீது அனைவரையும் அன்பு செலுத்த வைப்பவை.இயேசுநாதரின் சொற்களை மனதில் நிறுத்தி அனைவரிடமும் அன்பு செலுத்திடுவோம். உலகெங்கும் அமைதி நிலவி, மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட கிறிஸ்துமஸ் நாளில் நெஞ்சார வாழ்த்துகிறேன்" என கூறியுள்ளார்.
கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/BKxI5YRkCt
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 24, 2022
வைகோ மதிமுக பொதுச்செயலாளர்
"கருணைக்கும், பொறுமைக்கும் மனிதநேயத்துக்கும் இலக்கணமான இயேசு பெருமான், தான் சித்திரவதைக்கு உள்ளானபோதும், சிரசில் முள்முடி சூட்டி சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியபோதும், தன்னைக் கொடுமைப்படுத்தியவர்களுக்காகவும் இரக்கம் காட்டிய உன்னதமான தியாகம் இப்பூவுலகத்துக்கு வழிகாட்டுகின்ற ஒளியாகவே பிரகாசிக்கின்றது. மலைப் பிரசங்கத்தில் அவர் செய்த உபதேச மொழிகள், உலக மக்கள் அனைவருக்கும், குறிப்பாக துன்பப்படுகின்றவர்களுக்கு, மனக் காயங்களுக்கு மாமருந்து ஆகும்.
அதனால்தான்,‘துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் - அவர்கள் ஆறுதல் அடைவார்கள். நீதியின் மேல் பசி தாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் - அவர்கள் திருப்தி அடைவார்கள். இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் - அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.’என்று உபதேசித்தவர், ‘கேளுங்கள் கொடுக்கப்படும் - தேடுங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் திறக்கப்படும்’ என நம்பிக்கை ஊட்டினார்.
இயேசு கிறிஸ்து போதித்த மனிதநேய நெறிகளைப் போற்றிப் பின்பற்றவும், சாதி-சமய வேற்றுமைகளைக் கடந்து சகோதரத்துவம் தமிழகத்தில் மேலோங்கவும் கிறிஸ்துமஸ் பண்டிகைத் திருநாளில் உறுதி கொள்வோம். உலகெங்கும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இந்நன்னாளில், கிறிஸ்தவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்த் - தேமுதிக தலைவர்
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்#happychristmas pic.twitter.com/HZr9pFtfat
— Vijayakant (@iVijayakant) December 24, 2022
"சாதி, மத, பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும், எல்லா மதமும் நம் மதமே என்ற பரந்த சிந்தனையோடு, அனைத்து மதத்தினரின் விழாக்களையும் நாம் வருடந்தோறும் கொண்டாடி வருகிறோம்.
இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் நன்னாளை முன்னிட்டு 24.12.2022 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்படுகிறது. " இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே"என்கின்ற நமது கொள்கை முழக்கத்தின் வழியில் இந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் கேக்குகளும், பிரியாணியும் வழங்கவுள்ளார்கள்.
இதில் தலைமை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.