டெல்லி தடியடி: தமிழக தலைவர்கள் கண்டனம்

Tamilnadu Political Leaders Condemned Violence at Delhi Protest : நாட்டின் குடியரசு தினத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது மிகுந்த வருத்தமளிக்கிறது

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லிக்குள் ட்ராக்டர் வாகன அணிவகுப்பு போராட்டம் வன்முறையில் முடிந்தது. சிங்கு எல்லைப்பகுதியிலும், இந்திய பொறியாளா்கள் நிலைய கட்டடப் பகுதியிலும் (ஐ.டி.ஓ) டெல்லி காவல்துறை   விவசாயிகள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

திராவிட கழகத் தலைவர் வீரமணி: 

ஆசரியர் கே. வீரமணி தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் குடியரசு நாளில், 60 நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் முன் கூட்டியே தெரிவித்து டிராக்டர் அணி வகுப்பு நடத்தும் நிலையில், அவர்கள்மீது கண்ணீர்ப் புகைக் குண்டுவீசியதும், தடியடி கொண்டு கொடூரமாக தாக்கியதும் மிகவும் கண்டனத்துக்கு உரியது.

அமைதி வழி போராட்டம் நடத்தினால் துப்பாக்கிப் பிரயோகமா? அடக்கு முறையைக் கைவிட்டு, அமைதி வழி போராடுவோரின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யட்டும்! குடியரசு நாளில் தலைநகரில் விவசாயிகள்மீது தாக்குதல் செய்தி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பொது மரியாதையைக் குலைக்கும். அமைதியான சூழலை அரசே வன்முறை மூலமாக மாற்றிவிடக் கூடாது. எச்சரிக்கை! விவசாயிகளின் வயிற்றில் அடித்தது போதாதா? இப்பொழுது விவசாயிகளையும் அடிக்கும் காரியத்தில் ஈடுபடுவதா?” என பதிவிட்டார்.

மு.க ஸ்டாலின்: 

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ” மத்திய அரசின் அணுகுமுறையே  போராட்டக் காட்சிகளுக்குக் காரணம். அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் வேளாண் சட்டங்கள் நிறைவேறியே இருக்காது! வன்முறை அரசின் திசைதிருப்பல் முயற்சிக்கு உதவிடும்! ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயல வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொல். திருமாவளவன்: 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”  விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர்ப் புகை
குண்டுகள் வீச்சு. மோடி அரசின் அரசப் பயங்கரவாத
ஒடுக்குமுறையை விசிக சார்பில் வன்மையாகக்  கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்: 

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ” தமிழகத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு, ஸ்டர்லைட் போராட்டங்களை எப்படி வன்முறையாக்கினார்களோ, அதேபோல வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியையும் அங்குள்ள காவல்துறையினர் வன்முறைக் களமாக்கியுள்ளனர். வன்முறையில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். தலைநகரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பிரச்சினையையும் பேசி தீர்க்க முடியும் என்ற நிலையில், மத்திய அரசாகட்டும், இங்குள்ள அடிமை அரசாகட்டும் மக்கள் போராட்டங்களை துப்பாக்கி மூலம் அடக்க முயற்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளன. ஜனநாயகத்தை போற்றுகிற குடியரசு தினத்தில் சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துவிடுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. ‘நானும் விவசாயி’ என்று நாடகம் போடுபவர்கள் அமைதி காக்கலாம். உண்மையான விவசாயிகளும், பொதுமக்களும் இந்த அக்கிரமங்களை சகித்துக் கொள்ளமாட்டார்கள்” என்று பதிவிட்டார்.

கே.எஸ் அழகிரி: 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி தனது செய்திக் குறிப்பில், ” தங்களது கோரிக்கைகளை முன்வைத்து டிராக்டர் பேரணி நடத்தி போராடுகிற விவசாயிகள் மீது வரலாறு காணாத வகையில் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் 46 வயது நிரம்பிய நவ்ஜித் என்ற விவசாயி உயிரிழக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பா.ஜ.க. காட்டுமிராண்டித்தனமான போக்கையே காட்டுகிறது ” என்று தெரிவித்தார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் : 

உயிர்வாழ உணவளிக்கும் விவசாயிகளை தடி கொண்டு தாக்கி உயிரைப் பறித்த கொடுங்கோல் பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

வைகோ:

பிடித்த முயலுக்கு மூன்று கால்  என்று பிடிவாதம் பிடித்து, விவசாயிகளை ஒடுக்க நினைத்தால் விபரீத முடிவே ஏற்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

டிடிவி. தினகரன்: 

அமமுக கட்சி பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்    வெளியிட்ட செய்திக்குறிப்பில்,” டெல்லியில் விவசாயிகள் மீதான காவல்துறையினரின் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியவை. நாட்டின் குடியரசு தினத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. விவசாயிகளின் பிரச்னைக்கு அமைதிவழியில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் மத்தியஅரசு ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

கருணாஸ்: 

கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க துணிந்துவிட்டார் பிரதமர் மோடி  என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu political leaders condemned violence at delhi protest farmers tractor rally

Next Story
இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வருகை எப்போது?EC teams to visit Tamil Nadu, Kerala, Puducherry for stock of poll preparations -இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வருகை எப்போது?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com