தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''200 பேருக்கு மிகாமல் கலாசார நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. மூடப்பட்ட அறை அல்லது அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் 50 சதவிகித நபர்களுக்கு மிகாமல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து கலாசார நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம். எனினும், அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளத் தடை தொடரும்" என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த ஊரடங்கு அரசாணையில், நவம்பர் 16-ம் தேதிக்குப் பின் மத நிகழ்ச்சிகளுக்காக நூறு பேர் வரை கூடலாம் என்று தமிழக அரசு தெரிவித்தது.
இதற்கிடையே, கடந்த நவம்பர் 12ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், "சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் 16.11.2020 முதல் நடத்த அனுமதிக்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு ரத்து செய்தது. அவற்றிற்கான தடை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் தொடர உத்தரவிடப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.
கொரோனா இரண்டாம் அலை பரவல் அபாயம் காரணமாக இந்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.