scorecardresearch

திடீர் உடல்நலக் குறைவு: நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் நாஞ்சில் சம்பத் அனுமதி

இலக்கியம், அரசியல், பட்டிமன்றம் என மேடை பேச்சுக்கு புகழ்பெற்ற நாஞ்சில் சம்பத் தற்போது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Nanjil Sampath speech about BJP cadre at Erode video
Nanjil Sampath

பிரபல இலக்கியம் அரசியல் பட்டிமன்ற மேடை பேச்சாளர் நாஞ்சில் சம்பத் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நாகர்கோவிலில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கடைக்கோடியான குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். இலக்கியம், அரசியல், பட்டிமன்றம் என மேடை பேச்சுக்கு புகழ்பெற்ற இவர், தேர்தல் நேரத்தில் பிரச்சாரங்களில் பங்கேற்பது வழக்கம்.  மாணவ பருவத்திலே பேச்சு கலையில் சிறந்து விளங்கிய இவர், தனது கல்லூரி காலங்களில் மேடை பேச்சுக்கு தேவையான திறனை வளர்த்துக்கொண்டார்.

தி.மு.க.வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நாஞ்சில் சம்பத், தி மு க வில் இருந்து வைகோ நீக்கப்பட்டபோது, தானும் திமுகவில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து வைகோ தொடங்கிய மதிமுகவில் இணைந்தார். ஒரு கட்டத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத், அதன்பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.

இந்த கட்சியில் இணைந்தவுடன் நாஞ்சில் சம்பத்திற்கு ஜெயலலிதா புதிய இனோவோ கார் கொடுத்தது தமிழகம் முழுவதும் ஒரு பேசு பொருளாக இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் டி.டி.தினகரன் அணியில் இருந்த சில நாட்களில் அதில் இருந்து விலகி மீண்டும் தி.மு.க வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பல்வேறு அரசியல் கட்சிக்கு இவர் பயணப்பட்டாலும் இவரது போர் குணம் மிக்க பேச்சாற்றல் தமிழர்களை ஈர்த்து வருகிறது என்பதே உண்மை. விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மீது எல்லை அற்ற அன்பு கொண்ட நாஞ்சில் சம்பத் தனது மகளுக்கு.பிரபாகரனின் துணைவியார் பெயரான மதிவதனி என்னும் பெயரை சூட்டி அழகு பார்த்தவர்.

இந்நிலையில், இன்று(ஜன 25) அதிகாலையில் நாஞ்சில் சம்பத்துக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து .மருத்துவர்களின் ஆலோசனைப்படி நாகர்கோவிலில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாஞ்சில் சம்பத்தின் மகன்,  டாக்டர். பரத் நாகர்கோவிலில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். தற்போது நாஞ்சில் சம்பத் மருத்துவர்களின் கண் காணிப்பில் இருப்பதாகவும் விரைவில், உடல்நலம் தேறி வீடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu politician nanjil sambath in hospital