நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த அதிமுக முடிந்துவிடவில்லை என் என்ட்ரி ஆரம்பித்துவிட்டது என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், முதலவராக பதவியேற்ற, எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் என அனைவரையும் ஓரம்கட்டி கட்சியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதில் கடந்த சட்டபை தேர்தலில், அதிமுக தமிழகத்தில் தோல்வியை சந்தித்தது, இதனால் கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனை ஏற்பட்டது.
இதனையடுத்து பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் முடிவில், செயல்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஒ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அன்று முதல் தற்போதுவரை அதிமுக போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.
அதிலும் குறிப்பாக கடந்த நாடாமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணியுடன் 40 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக ஒரு வெற்றி கூட பெற முடியவில்லை. இதனால் கட்சி ஒற்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், தற்போது அதிமுக முடிந்துவிடவில்லை. என் என்ட்ரி ஆரம்பமாகிவிட்டது என்று ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறியுள்ளார்.
சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்த சசிகலா கூறுகையில், அதிமுக ஏழைகளுக்கான இயக்கம். நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு, இந்தியாவிலேயே 3-வது பெரிய இயக்கமாக அதிமுகவை கொண்டு வந்தோம். ஆனால் இன்று இயக்கம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த சுயநலவாதிகள், இந்த இயக்கத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
இன்றைய நிலைமையில் அதிமுக 3-வது 4-வது இடத்திற்கு சென்றுவிட்டது. சிலர் தானும் கெட்டு கட்சியையும் கெடுக்க கூடாது. பொதுமக்களுக்கு அதிமுக என்றால் மிகவும் பிரியம். இப்போது காலம் கணிந்துவிட்டது. இதையே எப்போதும் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இதுதான் நல்ல நேரம். நிச்சயமாக தமிழக மக்கள் நமம் பக்கம் தான். 2026-ல் தனிப்பெரும் கட்சியாக அம்மாவின் ஆட்சியை அமைப்போம். நான் முக்கியமான நேரத்தில் மட்டுமே குரல் கொடுப்பேன்.
மக்களுக்கு நல்லாட்சியை கொடுக்க வேண்டும். தி.மு.க.வின் கோரப்பிடியில் இருந்து மக்களை காக்க வேண்டும். எனக்கு ஒரு கண் தொண்டர்கள் என்றால், மறுகண் மக்கள். 40 வருடங்கள் மக்கள் பணி. இனி வரும் காலமும் மக்களுக்காகத்தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“