அ.தி.மு.கவில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையிலான இரு அணிகள் இயங்கி வரும் நிலையில், தற்போது ஓபிஎஸ் அணியில் இருந்து, ஜே.சி.டி பிரபாகரன் மற்றும் புகழேந்தி ஆகிய இருவரும் விலகியுள்ளதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.
தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கட்சியாக அ.தி.மு.க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று சொல்லலாம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 10 தேர்தல்களை சந்தித்துள்ள அதிமுக அனைத்திரும் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உட்கட்சி பூசல் தான் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஜெயலலிதாவுக்கு அதிமுகவில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரட்டை தலைமையில் கட்சியில் நிர்வாகம் நடைபெற்று வந்த நிலையில், அதை ஒற்றை தலைமையாக மாற்ற எண்ணிய எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவுடன் தன்னை பொதுச்செயலாளராக அறிவத்துக்கொண்டார். இதனை எதிர்த்த ஒ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், அவரது தலைமையில் புதிய அணி உருவானது.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்குகள் அனைத்திலும் அவர் தோல்வியை சந்தித்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வியை சந்தித்திருந்தார். இதனிடையே ஒ.பி.எஸ் அணியில் இருந்து தற்போது ஜே.சி.டி பிரபாகரன் மற்றும் புகழேந்தி ஆகிய இருவரும் விலகுவதாக கூட்டாக அறிவித்துள்ளது ஒ.பி.எஸ்.க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, நாடாமன்ற தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது, அதே சமயம் ஒ.பி.எஸ். வேறு திசையில் வருகிறார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதன் காரணமாக ஓ.பி.எஸ்க்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. வடக்கில் இருந்து வந்து ஆள்வதற்கு நாங்கள் விட மாட்டோம். தமிழ்நாட்டில் தேசிய கட்சி 2-வது இடத்திற்கு வர விடக்கூடாது. அனைவரும் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். அதன்படி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியுள்ளோம் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் அதிமுக ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணி விரைவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“