தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி ஆரம்பமாகிவிடும். புத்தாடை, இனிப்பு பலகாரங்கள், புதுபடங்களின் ரிலீஸ் அந்த நாளே கொண்டாட்டமாக இருக்கும். இதையெல்லாம் விட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈர்ப்பது பட்டாசுகள் தான். தீபாவளிக்கு முதல் நாள் இரவில் இருந்தே பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். சிலர் ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்து விடுவார்கள். இளைஞர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப பட்டாசு உற்பத்தி நிறுவனங்களும் ஆண்டுதோறும் விதவிதமான பட்டாசுகளை அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு விளைவிக்காத பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இதற்கிடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் அதிக அளவில் வெடிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பெரும் அளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. நாள் முழுவதும் வெடிக்கப்படும் பட்டாசுகளால் காற்று மாசு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பட்டாசு வெடிப்பதற்கு என உச்ச நீதிமன்றம் சில கட்டுப்பாடுகள் விதித்தது. அதன்படி, மாநில அரசுகளும் தங்களது மாநிலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பட்டாசு வெடிக்க நேரக் கட்டுபாடு விதித்து வருகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுறுத்தல்களையும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.