தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிதம்பரத்தில் இயற்கை உழவர் அமைப்பின் விற்பனை மையத்தில் நடைபெற்ற நம்மாழ்வார் 10ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் மலரஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
கடலூர் மாவட்டத்தில் பரவனாறு கடல் முகத்துவாரத்தில் அமைக்கப்பட உள்ள அருவாமூக்குத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் வெள்ளமணல் தடுப்பணை திட்டத்தை நடப்பாண்டு நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் திட்டத்தில் கரும்பு,நாட்டு வெல்லம், முந்திரி, திராட்சை வழங்குவது தொடர வேண்டும்.
தென்னை உற்பத்தியாளர்கள் இழப்பை ஈடு செய்ய, பொங்கல் பரிசு திட்டத்தில் தேங்காய் இணைத்து வழங்க வேண்டும். பாரம்பரிய வேளாண் உற்பத்தி பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் பாரம்பரிய அரிசி பொங்கல் பரிசுத் திட்டத்தில் இணைத்து வழங்க வேண்டும். நம்மாழ்வார் நினைவு மணிமண்டபத்தை தஞ்சாவூரில் ஏற்படுத்த வேண்டும். அவரது கண்டுபிடிப்புகளை காட்சிக்கூடங்களாக அமைத்திட வேண்டும்.
தமிழ்நாடு அரசு உணவு பதப்படுத்துதல், மற்றும் மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்வதற்கான புதிய துறையை உடன் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். அதனை ஏற்று தற்போது தமிழ்நாடு அரசுக்கென தனியாக உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்வதற்கான புதிய துறையை உருவாக்கியுள்ளதை வரவேற்கிறோம். முதலமைச்சருக்கும், வேளாண்துறைக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட செயலாளர் மணிக்கொல்லை ராமச்சந்திரன், இயற்கை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டு விற்பனை மைய ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன்,குடவாசல் ஒன்றிய செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“