திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கோவில் தெரு, கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்19. இவர், கடந்த 2021 ஜூலை 23ல் பெரம்பலுார் மாவட்டம், புதுக்குறிச்சி கிராமத்தில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது, பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து, சிறுமியின் தாய், பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின்படி, போக்சோ சட்டத்தின் கீழ் பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி இன்று பரபரப்பு தீர்ப்பு கூறினார். இதில், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக பிரதீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், பாலியல் தொல்லை குற்றத்திற்காக 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், அபராத தொகையில் ரூ.50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும், தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து போலீசார், பிரதீப்பை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டதால் பிரதீப் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க உள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் சுந்தரராஜன் ஆஜரானார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“