தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் சி.அரசு தலைமையில் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் துரை பிரபாகர் வரவேற்றார். பொதுச் செயலாளர் குணசேகரன் இயக்க உரை ஆற்றினார். மாநில ஓய்வு பிரிவு தலைவர் அய்யப்பன், மாநில பொருளாளர் ஜெகநாதன், முன்னாள் மாநில பொருளாளர் கதிரவன் உள்ளிட்ட ஏராளமான மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகிற 22 ஆம் தேதி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், மத்திய அரசுக்கு இணையாக இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் , 6000 தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும் அரசாணை எண் 243 ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆசிரியர்கள் 5,000 பேர் பங்கேற்க வேண்டும்.
மேலும் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக சென்னையில் வருகிற அக்டோபர் 11ஆம் தேதி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில பொருளாளர் நீலகண்டன் நன்றி கூறினார்.
க.சண்முகவடிவேல்