கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகின்றது.
மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 27 முதல் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும். குடகு, சிக்மகளூரு, ஹாசன், வயநாடு மாவட்டங்களிலும், வால்பாறை, நீலகிரி பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அவலாஞ்சி மற்றும் மேல் பவானி பகுதிகளிலும் கனமழைக்கான வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை தவிர மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். சுதந்திர தினத்துக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும், என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 13.8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அப்பர் பவானியில் 6.4 செ.மீ மழையும், கிளண்மார்கன் பகுதியில் 5.7 செ.மீ, குந்தாவில் 5 செ.மீ மழையும், நடுவட்டத்தில் 4.2 செ.மீ, ஓவேலியில் 3.8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“