தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தற்போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோல விருதுநகர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மிக கனமழைக்கு வாய்ப்புள்ள 4 மாவட்டங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மழை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் மழை குறித்து கணித்துள்ளார். அதன்படி, சென்னை முதல் வேலூர் வரையுள்ள பகுதிகளில் பிற்பகலில் இருந்து இரவு வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது வலைதள பக்கத்தில், "மழை மீண்டும் தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் (மார்ச் 11 மற்றும் 12) வெப்பநிலை கணிசமாகக் குறையும். அதேநேரம், தென் தமிழகம் மற்றும் டெல்டா பெல்ட்டின் சில பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சுற்றுவட்டாரத்தை பொறுத்தவரை இன்று (செவ்வாய்க்கிழமை) ஓரளவு மழை பெய்யும்.
முந்தைய ஆண்டுகளைப் போல முழுமையாக வறண்டு போகாமல், மழை பெய்வது தனிச்சிறப்பு. இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் மழை பெய்யும் என்றாலும், டெல்டா மற்றும் தென்தமிழகத்தில் கனமழை பெய்யும். சென்னை முதல் வேலூர் வரை நண்பகல் முதல் இரவு வரை மழை பெய்யும். எனவே குடையை எடுத்துச் செல்லுங்கள்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குற்றாலத்திலும் நல்ல மழையால் அருவிகளில் நீர் பெருக்கெடுக்கலாம். கொங்கு மண்டலத்தின் பிற உட்புறப் பகுதிகளில் மிதமான மழையும், சில நேரங்களில் கனமழை பெய்யும். ஒட்டுமொத்த வெப்பநிலை மிகவும் நன்றாக இருக்கும். எனவே இந்த இரண்டு நாட்களையும் அனுபவியுங்கள்." என்று பதிவிட்டுள்ளார்.