Heavy Rain Alert in Tamil Nadu: தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சென்னையில் விமானங்கள் சரியான நேரத்திற்கு கிளம்பாமல் தாமதமாக சென்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது,
கேரளாவை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அதிதீவிர கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து வரும் 7ம் தேதி பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும், காற்று அதிகமாக வீசக்கூடிய இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளதால், பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடாது பெய்து வரும் மழை குறித்த நிலவத்தை இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார் வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரன்.
“ஒரே நாளில் 21 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. வழக்கத்தை விட மிகுந்த சீற்றத்துடன் கடல் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பு. சென்னையை பொறுத்தவரை இடைவெளி விட்டு மழை பெய்யும்” எனக் கூறினார்.
சென்னையில் எழும்பூர், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, வடபழனி, கோயம்பேடு, திருவொற்றியூர், மணலி, வள்ளுவர்கோட்டம், மயிலாப்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் விடிய, விடிய பெய்யத் தொடங்கிய மழை இன்று காலையும் தொடர்ந்து வருகிறது.
Tamil Nadu Rains, Red Alert LIVE UPDATES: மழை தொடர்பான லைவ் செய்திகள்:
3:15 PM: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும்.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 8-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும். மீனவர்கள் குமரிக்கடல், லட்சத் தீவுகள், தென் கிழக்கு மற்றும் அரபிக் கடல் பகுதிகளுக்கு இன்று முதல் செல்ல வேண்டாம். இந்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
2:50 PM : குற்றாலத்தில் தண்ணீர் சற்றே குறைந்ததை தொடர்ந்து பிற்பகலில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
2:25 PM: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இன்று இரவு 7 மணிக்கு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். அப்போது வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் ரெட் அலர்ட் குறித்தும் தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆளுனரிடம் அவர் விவரிப்பார் என தெரிகிறது.
அதற்கு முன் ஏற்பாடாகவே தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
2:00 PM : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரிக்கு செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
1.30 PM: சென்னையில் மழையை தொடர்ந்து பல்வேறு ஊர்களுக்கு விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. வெளியூர்களில் இருந்து வரும் விமானங்களும் தாமதமாக வந்தன.
12.00 PM : தமிழக மீனவர்கள் பெரும்பாலும் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. வானிலை ஆய்வு மைய அறிவுறுத்தலுக்கு இணங்க ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கரை திரும்பி வருகிறார்கள்.
11:00 AM: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் பிரசித்தி பெற்ற குற்றாலம் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. அங்கு 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இல்லை.
10:00 AM : தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகை, சென்னை, காஞ்சிபுரம் உள்பட பல மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை மீறி வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.