சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்னும் ஒன்று அல்லது 2 மணி நேரத்தில் மழை பெய்யத் தொடங்கும் என்றும் அது அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அது தற்போது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இது தற்போது மெதுவாக நகர்ந்து வருவதால் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்கு, அதாவது வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்.
டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சை, ராமநாதபுரத்தின் ஒரு சில பகுதிகளில், கடலூர், புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழை பெய்ய உள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மழை தொடங்குகிறது.
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கும் இன்று முதல் டிசம்பர் 1 வரை கனமழை முதல் மிக கனமழை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கார்களை பாலத்தில் நிறுத்தலாமா, விடுதியில் தங்கிவிடலாமா, சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு போய் எல்லா மளிகை பொருட்களையும் வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாமா என்ற கேள்விகளுக்கு நான் எந்த பதிலையும் அளிக்க மாட்டேன் என்றும் அந்த பதிவில் கூறியுள்ளார்.
பூண்டி ஏரியில் 15 சதவீதமும் செம்பரம்பாக்கத்தில் 59 சதவீதமும் செங்குன்றம் ஏரியில் 71 சதவீதமும் மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மழை தேவைப்படுகிறது என்றும் பதிவிட்டு இருந்தார்.
வரும் 2025 ஆம் ஆண்டு தண்ணீர் பிரச்சினை இருக்குமா என்றால் இதற்கு பதில் இல்லை. இந்த 4 அல்லது 5 நாட்கள் மழை பெய்தாலே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கிறேன். இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இதுதான் மிக பெரிய கடைசி மழையாக அமையும். என்றும் அந்த பதிவில் வெதர்மேன் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“