தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் இன்று மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தற்போது வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ,தென்காசி, திருப்பூர், கரூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சிவகங்கை உள்ளிட்ட 22 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (நவ.10 ) ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். மேலும்
கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (நவ.10 ) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“