க.சண்முகவடிவேல்
திமுக முதலமைச் செயலாளரும் அமைச்சருமான கே.என் நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை வழக்கில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழு எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் வழக்கை மீண்டும் தூசி தட்டி விசாரித்து வருகின்றனர். திருச்சி ஜே.எம் 6 நீதிமன்றத்தில் நீதி அரசர் சிவக்குமார் அமர்வில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது.
சிறப்பு புலனாய்வு குழுவினர் தமிழகத்தின் பிரபலமான 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்து, அதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கடந்த 1, 7, 14ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புதல் தெரிவிக்க அல்லது ஆட்சேபனையை தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதில் ரவுடிகள் மோகன்ராம், தினேஷ், கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, திலீப் எனும் லட்சுமிநாராயணன் , ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா கடலூர், சிறையில் இருக்கும் செந்தில் ஆகிய 13 பெரும் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 9 பேர் மட்டும் கடந்த 14ஆம் தேதி ஜே.எம் 6 நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
இவர்களில் சாமி ரவி, சத்யராஜ், லட்சுமி நாராயணன், சிவா என்கிற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து உள்ளிட்ட 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துவிட்டனர். தென்கோவன் எனும் சண்முகம் மட்டும் ஏற்கெனவே தான் காவல்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து விட்டதாகவும், அதனால் இந்த உண்மை கண்டறியும் சோதனையில் கலந்துகொள்ள முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து 17-ஆம் தேதியன்று ஆஜராகாத ரவுடிகளை கட்டாயம் ஆஜர் படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி சிவக்குமார், வழக்கை தள்ளி வைத்தார். அதன்படி, இன்றைய தினம் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 4 பேர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர்.
ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஏற்கனவே 8 பேர் சம்மதம் தெரிவித்த நிலையில் மோகன்ராம், நரைமுடி கணேசன், திணேஷ், கடலூர் செந்தில் ஆகிய நான்கு பேரும் இன்று நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். மேலும், உண்மை கண்டறியும் சோதனையின்போது மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் உடன் இருக்க வேண்டும் என்று நீதிபதியிடம் வேண்டுகோள் வைத்து மனுதாக்கல் செய்தனர்.
இதன் மூலம் இதுவரை மொத்தம் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். சம்மதம் தெரிவித்த 12 பேரும் மறுப்பு தெரிவித்த ஒருவரும் என மொத்தம் 13 பேரும் வருகிற 21ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதற்கு முன்னதாக சம்மதம் தெரிவித்த 12 பேருக்கும் உடல் தகுதி சோதனை நடத்த நீதிபதி சிவகுமார் உத்தரவு பிறப்பித்தார்.
உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் தெரிவித்த 12 பேருக்கும் நான்கு நபர்களாக மூன்று நாட்களில் உடல் தகுதி சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவிற்கு நீதிபதி ஆணையிட்டார். ராமஜெயம் கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. கொலையாளி யார், கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி இதுவரை ஒரு துப்பும் கிடைக்கவில்லை. 13 ரவுடிகளை பிடித்துள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உள்ள நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்ன என்பது இனியாவது தெரிய வருமா என்பது கேள்விக்குறியுடன் வழக்கும் நீண்டுகொண்டே செல்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“