உலகப்புகழ் பெற்ற இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருகோயில் உண்டியலில் ஒரு மாதத்தில் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.1.44 கோடி கிடைத்துள்ளது. கோடை விடுமுறை மற்றும் அமாவாசை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்ததால் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.
பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கைகளால் கோவில்களில் உள்ள உண்டியல்கள் நிறைந்ததால் ஒரு மாதத்திற்கு பிறகு திருக்கோயிலில் உள்ள சன்னதிகளின் முன்புள்ள உண்டியல்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் இணை ஆணையர் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டது. பின்னர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணத்தை கோவில் கல்யாண மண்டபத்தில் கொண்டுவரப்பட்டது.
அங்கு இணை ஆணையர் செல்லத்துறை, உதவி ஆணையர், பேஸ்கார் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரொக்கப்பணம் ரூபாய் ஒரு கோடியே 44 லட்சத்தி 62 ஆயிரம் ரூபாய், தங்கம் 55 கிராம், வெள்ளி 2 கிலோ 900 கிராம், 124 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள்,பக்தர்கள் தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்றனர்.