scorecardresearch

பழனி முருகன் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த மறுப்பதா? பெ.மணியரசன் உண்ணாவிரதம் அறிவிப்பு

புதிதாக என்னென்ன தமிழ் மந்திரங்களைச் தமிழ் வழிபாட்டில் சேர்க்கலாம் என்பதற்கு, தமிழ்நாடு அரசு ஒரு வல்லுநர் குழு அமைக்க வேண்டும்

பழனி முருகன் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த மறுப்பதா? பெ.மணியரசன் உண்ணாவிரதம் அறிவிப்பு

பழனி முருகன் கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த தமிழ்நாடு அரசு மறுப்பது தொடர்பாக ஜனவரி 20-ல் பழனியில் மாபெரும் உண்ணாப் போராட்டம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையரை சந்தித்தப் பிறகு தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிவித்துள்ளார்.

பழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு வரும் தி.பி. 2054 தை 13 (27.01.2023) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தமிழ்க்குமரன் திருக்கோயில் பழனி குடமுழுக்கை கருவறை – வேள்விச்சாலை – கலசம் வரை திருநெறிய தமிழ் மந்திரங்களை அர்ச்சித்து சிறப்பாக நடத்திடக் கோரிக்கை வைத்து, இன்று தி.பி. 2053 மார்கழி 6 (21.12.2022) அறிவன் கிழமை முற்பகல் 10.45 மணியளவில், சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. குமரகுருபரன் அவர்களிடம் தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்களும், நானும் விண்ணப்பம் கொடுத்தோம்.

தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்களான ஐயா குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி – இராசயோக சித்தர் பீடம், குச்சனூர், தேனி மாவட்டம்), ஐயா சித்தர் மூங்கிலடியார் (தலைவர் – இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம். பதினெண் சித்தர் பீடம், காரனோடை), சிம்மம் சத்தியபாமா அம்மையார் (நிறுவனர் – சத்தியபாமா அறக்கட்டளை, தமிழ் வேத ஆகமப் பாடசாலை, மேச்சேரி, சேலம்), தோழர் கி. வெங்கட்ராமன் (தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்), வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங் கிணைப்பாளர் திரு. முருகேசன், திருவாட்டி. கலையரசி நடராசன் (தலைவர், தமிழ்ச் சைவப் பேரவை, ஆவடி. சென்னை), முனைவர் ஆசீவக சுடரொளி (நிறுவனர் – ஆசீவகம் சமய நடுவம்), திரு. சிவ வடிவேலன் (செந்தமிழ் ஆகம அந்தணர், செயற்குழு உறுப்பினர், தெய்வத் தமிழ்ப் பேரவை), வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ் (செயற்குழு உறுப்பினர், தெய்வத் தமிழ்ப் பேரவை, புதுச்சேரி), தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி ஆகியோர் அடங்கிய குழுவினர் இம்மனுவை ஆணையரிடம் வழங்கினர்.

ஆணையர் அம்மனுவை மேம்போக்காகப் பார்த்துவிட்டு, தமிழ்நாடு அரசு தமிழ் அர்ச்சனைக்காக ஒரு குழு போட்டிருக்கிறது. அதன் பரிந்துரை வந்த பிறகுதான் செயல்படுத்த முடியும். நீதிபதிகள் கிருபாகரன் – புகழேந்தி அமர்வு தீர்ப்பு அதுதான் என்றார். இதற்குரிய சட்டப்படியான மறுமொழியை நான் சொல்ல முயன்றபோது குமரகுருபரன், “உங்களிடம் நான் இதுவரை பேசியது உங்களுக்குப் புரியவில்லை. நான் பேசியது வேஸ்ட்” என்றார். எங்கள் கருத்தையும் கேளுங்கள் என்றேன். சிம்மம் சத்தியபாமா அம்மையாரும், தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களும் விடையளித்துப் பேசியதையும் ஆணையர் செவிமடுக்கவில்லை. உங்களை உட்கார வைத்துப் பேசியதே தவறு; நீங்கள் வெளியே கிளம்புங்கள் என்றார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் அதிகாரியாய் இருந்த வெள்ளைக்காரத் துரை கூட குமரகுருபரன் பாணியில் நடந்து கொண்டிருப்பாரா என்பது ஐயமே!  அதன் பிறகு, நாங்கள் அனைவரும் வெளியே வந்து, கலந்து பேசினோம். ஆணையர் சொன்ன விடையும், அவர் நடவடிக்கையும் பழனி முருகன் கோயில் குடமுழுக்கில் கருவறை – வேள்விச்சாலை – கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்கள் இடம்பெறாது என்பது தெளிவானது. இவ்வாண்டு தொடக்கத்தில் நடந்த வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கை முழுக்க முழுக்க சமற்கிருதத்திலேயே அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மேற்பார்வையில் நடத்தினர்.

அதேநிலை தமிழ்நாடு அரசில் இப்போதும் தொடர்கிறது என்பதைப் புரிந்து கொண்டோம். எங்களிடம் மேற்படி ஆணையர் கேட்க மறுத்த சட்டப்படியான பதில் கருத்தை இப்போது பொதுவெளியில் வைக்கிறோம். மேற்படி ஆணையர் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளைத் தீர்ப்பு என்பது 2020 டிசம்பர் 3இல் வந்தது. கரூர் பசுபதீசுவரர் கோயில் திருக்குடமுழுக்கு 04.12.2020 அன்று நடக்கப் போவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது. அவ்வாறு அறிவிப்பு வந்தவுடன் நமது தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் ஐயா சித்தர் மூங்கிலடியார், 21.11.2022 அன்று உரிய அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அனுப்பி தமிழ்வழி குடமுழுக்கு கோரினார்.

அவர் கோரிக்கை ஏற்கப்படாததால் மதுரை உயர் நீதிமன்றத்தில் மூங்கிலடியாரும், மற்றவர்களும் வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கை விசாரித்து, 04.12.2022 குடமுழுக்குக்கு முன் 03.12.2022 அன்று நீதிபதிகள் கிருபாகரன் – புகழேந்தி அமர்வு தீர்ப்பு வழங்கியது. (W.P. (MD) No. 19115 of 2020). அதற்கு முன் 05.01.2020 அன்று நடந்த தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழிலும், சமற்கிருதத்திலும் சரி பாதியாகப் பகிர்ந்து நடத்த அப்போதிருந்த அ.இ.அ.தி.மு.க.வின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு மதுரை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அதையே அப்போதைய நீதிபதிகள் துரைசாமி – இரவீந்திரநாத் அமர்வு உறுதி செய்து தீர்ப்பாக அளித்தது. (W.P. (MD) No. 1102, 1126 and 1644 of 2020).

அது தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் ஓரளவு செயல்படுத்தவும்பட்டது. வேள்விச்சாலை, கோபுரக்கலசம், புனித நீராட்டல் நிகழ்வுகளில் தமிழ் ஓதுவா மூர்த்திகள் பங்கேற்று தமிழ் மந்திர அர்ச்சனை செய்தனர். கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்தக் கோரிய வழக்கில் 03.12.2020 அன்று வழங்கிய மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்பு, மேற்படி தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்குத் தீர்ப்பு செல்லாது என்றோ, தள்ளுபடி செய்தோ தீர்ப்பளிக்கவில்லை. அதை மீண்டும் உறுதிப்படுத்தியது. தமிழ் மந்திரங்கள் கோபுரக் கலசத்தில் ஒலித்தன. ஆனால், 03.12.2020 தீர்ப்பு ஒரு பரிந்துரை செய்தது. 

அதில், புதிது புதிதாக தமிழ் மந்திரங்களைச் சேர்க்கச் சொல்லி கோரிக்கை வருகிறது, இந்த மனுதாரர் (சித்தர் மூங்கிலடியார்) திருமுறைகளுடன், சித்தர் அமராவதி ஆற்றங்கரை கருவூரார் பாடல்களையும் அர்ச்சனை மந்திரத்தில் தமிழ்நாடு அரசு சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதுபோன்ற கோரிக்கைகளை ஆய்வு செய்து புதிதாக என்னென்ன தமிழ் மந்திரங்களைச் தமிழ் வழிபாட்டில் சேர்க்கலாம் என்பதற்கு, தமிழ்நாடு அரசு ஒரு வல்லுநர் குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரைகளையும் கவனத்தில் கொண்டு தமிழ் மந்திர வரிசையை முறைப்படுத்தலாம் என்று கூறியது.

ஆனால், ஏற்கெனவே தமிழ் மந்திர அர்ச்சனைகள் நடந்து வந்ததைத் தடுக்கவில்லை. மேலும், செழுமைப்படுத்திடத் தான் பின்னர் வந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு வழிகாட்டியது.  இதே தி.மு.க. ஆட்சி, 2021இல் அமைந்த பிறகு 47 முதன்மையான கோயில்களில் “அன்னைத் தமிழில் அர்ச்சனை”த் திட்டத்தைத் தொடங்கி, அரைகுறையாக வேணும் செயல்படுத்தி வருகிறது. இப்போது, 2020 டிசம்பர் 3ஆம் நாள் தீர்ப்புக்கு 2022இல் குழு போட்டிருப்பதாகச் சொல்லும் அரசும், அதிகாரிகளும் “அன்னைத் தமிழில் அர்ச்சனை”த் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்களா? அப்படி எந்த அறிவிப்பையும் இந்து சமய அறநிலையத்துறை இதுவரை வெளியிடவில்லை!

இன்னொரு கேள்வி : கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 1997இல் (10.09.1997) இந்து சமய அறநிலையத்துறை ஒரு சுற்றறிக்கை (சுற்றறிக்கை ந.க. எண் : 73848 / 97 / கே.1) அனுப்பியது. அதில், அறநிலையத்துறையில் உள்ள கோயில்களில் தமிழ் மந்திர அர்ச்சனை செய்ய வேண்டும் என்று அரசு கூறியிருந்தது. அத்துடன் தமிழ் மந்திர அர்ச்சனைப் புத்தகங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதெல்லாம் செல்லாது என்று இதுவரை எந்தத் தீர்ப்பும் கூறவில்லை. இவ்வாண்டு (2022) கூட, தமிழ்நாடு அரசு தமிழ் மந்திர அர்ச்சனை நடத்தும் அர்ச்சகர்களுக்குப் பயிற்சிப் பள்ளிகள் திறந்துள்ளது.

ஆனால், தமிழ்க்குமரன் கோயிலான பழனி முருகன் கோயிலில் 27.01.2023 அன்று நடைபெறவுள்ள குடமுழுக்கையும், அதையொட்டிய நிகழ்வுகளையும் தமிழ்வழியில் இப்போது நடத்த முடியாது – வல்லுநர் குழுவின் அறிக்கை வரட்டும் என்ற ஆணையர் குமரகுருபரன் மறுப்பதன் மர்மம் என்ன? பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கை 27.01.2023 அன்றும் அதற்கு முன்பும் பின்பும் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் – குடமுழுக்கு உட்பட அனைத்திலும் சரி பாதியாகத் தமிழ் மந்திரம் இடம் பெற வலியுறுத்தி, வரும் 20.01.2023 அன்று, பழனியில் காலையிலிருந்து மாலை 6 மணி வரை உண்ணாப் போராட்டத்தைத் தெய்வத் தமிழ்ப் பேரவை நடத்துவது என்று செயற்குழு முடிவு செய்கிறது. தமிழ் மந்திரக் குடமுழுக்கு கோரும் இந்த அறப்போராட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்! என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu refusal to perform ordination in tamil at palani murugan temple

Best of Express