Tamil Nadu News Today : Petrol and Diesel Price: சென்னையில் 80 நாட்களை கடந்தும், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu News Update: இந்தியா முழுவதும் 73வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை 10. 40 மணியளவில், தேசிய கொடியேற்றினார். முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதேபோல சென்னை மெரினா கடற்கரை சாலையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட முப்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டது.
Tamil Nadu News Updates
* கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைரல் பூனாவாலா, கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் சிஇஒ சத்யா நாதெல்லாவுக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சிற்பி பாலசுப்பிரமணியம், நடிகை சவுகார் ஜானகி உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பதம்ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
* மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மூத்த சிபிஎம் தலைவருமான புத்தேப் பட்டாச்சார்யா தனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருதை ஏற்கபோவதில்லை என அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க முடியாது என ஊழியர்கள் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது; இதனை கண்டித்து நாளை (ஜன 27) காலை ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று த.வா.க. தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
மும்பை கார்டியன் அமைச்சர் அஸ்லாம் ஷேக்கின் நிதியுதவியில் மல்வானியில் புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு வளாகத்தைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மைசூர் மன்னர் திப்பு சுல்தானின் பெயரை மாற்றும் நடவடிக்கையை எதிர்ப்பதாகக் கூறி ஏராளமான பாஜக மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் புதன்கிழமை போராட்டங்களை நடத்தினர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட 5 பேர் மீது எம்.ஐ.டி.சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘காப்புரிமை மீறல்’ வழக்கில் இயக்குநர்-தயாரிப்பாளர் சுனில் தர்ஷன் அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது 2017 திரைப்படமான ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா படத்தின் உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை என்றாலும், கூகுளுக்கு சொந்தமான யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தர்ஷன் கூறினார். திரைப்படம் தனது அறிவுசார் சொத்து என்றாலும், வீடியோ பகிர்வு தளத்தில் படத்தை பதிவேற்றுவதன் மூலம் பலர் பணம் சம்பாதிப்பதாகவும் அவர் கூறினார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னையில் மேலும் 5,973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 23 பேர் உயிரிழந்தனர். சென்னைக்கு அடுத்து அதிகபட்சமாக, கோவையில் மேலும் 3,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டில் மேலும் 1,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் செங்கல்பட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் மேலும் 29,976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் 47 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தொடர்ந்து 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 28ம் தேதி முதல் பிப். 4ம் தேதி வரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில், விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேதி இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது
சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்
வனவிலங்குகளின் மரபணு ஆராய்ச்சி ஆய்வகம் அமைக்க தேவையான அனைத்து இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டுவிட்டதாக தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் ரூ424 கோடி மதிப்பில் 13 இடங்களில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படுகின்றன என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ள கரும்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் இருளர் இனத்தைச் சேர்ந்த கன்னியம்மாள் என்ற மூதாட்டி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சர்வதேச அட்டரி வாகா எல்லையில் இரு நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் பங்குபெறும் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சிக்கு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு குறைந்த அளவிலான பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுளளது.
பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் பெறும் தமிழர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், விருது பெறும் உங்களால் தமிழகம் பெருமை கொள்கிறது என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு அலுவலகங்கள், கல்வி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். இசைத்தட்டுகளை கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தை வாய்ப்பாட்டாக பாட வேண்டும்.
தமிழக குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் வடதமிழ்நாட்டு விடுதலை வீரர்களை புறக்கணிப்பதா? தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா? தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு ஆர்பிஐ அதிகாரிகள் எழுந்து நிற்காததற்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? என பதிவிட்டுள்ளார்
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
விருதுகள் விபரம்
பேரறிஞர் அண்ணா விருது – நாஞ்சில் சம்பத்,
மகாகவி பாரதியார் விருது – பாரதி கிருஷ்ணகுமார்,
பாவேந்தர் பாரதிதாசன் விருது – புலவர் செந்தலை கவுதமன்,
சொல்லின் செல்வர் விருது – சூர்யா சேவியர்,
சிங்காரவேலர் விருது – கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்,
தமிழ்த்தாய் விருது – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் இரா. சஞ்சீவிராயர்.
சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது – உயிர்மை திங்களிதழ்
தேவநேயப்பாவாணர் விருது – முனைவர் கு. அரசேந்திரன்,
உமறுப்புலவர் விருது – நா. மம்மது,
கி.ஆ.பெ. விருது முனைவர் – ம. இராசேந்திரன்,
கம்பர் விருது – பாரதி பாஸ்கர்,
ஜி.யு.போப் விருது – ஏ.எஸ். பன்னீர்செல்வம்,
மறைமலையடிகள் விருது – சுகி.சிவம்,
இளங்கோவடிகள் விருது – நெல்லைக் கண்ணன்,
அயோத்திதாசப் பண்டிதர் விருது – ஞான அலாய்சியஸ்.
இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.1,00,000/- லிருந்து ரூ.2,00,000/- உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவர்.
உத்தரகாண்ட்டில் 14,000 அடி உயரத்தில் பாதுகாப்பு படையினர் குடியரசுத் தினவிழாவைக் கொண்டாடி வீர முழக்கமிட்டனர்
பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு அண்ணா பதக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் அட்டவணை வெளியீடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகளை பிற மாவட்டங்களுக்கு அனுப்பும் நிகழ்வை தீவுத்திடலில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
விக்கிரவாண்டி அருகே அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா, அரிஸ்டோ ஆகிய 5 ஓட்டல்களில் அரசு பேருந்துகளை உணவுக்காக நிறுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. 5 உணவகங்களிலும், சுகாதாரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கை எடுத்தார்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அதிமுகவினர் குறித்து தன்னுடைய கருத்தை வெளியிட்டிருந்தார் நயினார் நாகேந்திரன். இதற்கு தக்க பதிலடி கொடுத்தது அதிமுக. இந்நிலையில் பாஜகவின் நயினார் நாகேந்திரனின் கருத்து பாஜகவின் நிலைப்பாடு இல்லை என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த சலனமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் ஒரே நாளில் 1,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 16,298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் உள்ள 2,356 தெருக்கள் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு படையினர் புடைசூழ குடியரசு தலைவர் மாளிகைக்கு ராம்நாத் கோவிந்த் புறப்பட்டுச் சென்றார். தேசிய கீதம் பாடி முடித்தவுடன் குடியரசு தினவிழா நிகழ்வுகள் டெல்லியில் நிறைவுற்றன.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான 75 போர் விமானங்களில் விமானப்படை வீரர்கள் தற்போது வான்வெளி சாகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் நடைபெற்று வரும் குடியரசு தின நிகழ்வின் ஒரு அங்கமாக இந்த சாகசம் நடைபெற்று வருகிறது.
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி படமான ஜேம்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அவரின் பிறந்த நாளான மார்ச் 20ம் தேதி அன்று இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
96 விமானப்படை வீரர்கள், 4 அதிகாரிகள் கொண்ட விமானப் படை அணிவகுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மிக்-21 , ரபேல் விமானங்கள், லைட் காம்பாட் ஹெலிகாப்டர்கள் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.
இன்று 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த தேசியக் கொடியை ஏற்றினார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் போலீஸ் ஏஎஸ்ஐ பாபு ராம், ஸ்ரீநகரில் ஆகஸ்ட் 2020 இல், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது 3 பயங்கரவாதிகளைக் கொன்றார். “வீரம் மற்றும் முன்மாதிரியான தைரியத்தை வெளிப்படுத்தியதற்காக” மரணத்திற்குப் பின் அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. அவரது மனைவி ரினா ராணி மற்றும் மகன் மாணிக் ஆகியோர் குடியரசுத் தலைவர் கோவிந்திடம் இருந்து விருதைப் பெறுகின்றனர்!
இந்தியாவின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு அட்டாரி-வாகா எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையும், பாகிஸ்தான் ராணுவமும் இனிப்புகள் மற்றும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டன.
#watch Border Security Force & Pakistan Rangers exchange sweets and greetings at JCP Attari on India's 73rd Republic Day pic.twitter.com/nTD23Wf937
— ANI (@ANI) January 26, 2022
73வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை!
#watch | Delhi: Prime Minister Narendra Modi lays wreath at the National War Memorial on 73rd #republicday pic.twitter.com/ZhYNBCmozh
— ANI (@ANI) January 26, 2022
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாதாக ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற 73வது குடியரசு தின விழாவில், ராஜேஸ்வரி, ராஜீவ்காந்தி, அசோகன், லோகித், முத்துகிருஷ்ணன், சொக்கநாதன், சுதா, தனியரசு ஆகியோருக்கு வீரத் தீர செயலுக்கான அண்ணா பதக்கத்துடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசிய கொடியேற்றினார். தெலுங்கானாவில் தேசிய கொடி ஏற்றிய பின், தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்த அவர், அங்கு தேசியக் கொடியை ஏற்றினார். குடியரசுத் தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வர் ஸ்டாலினுக்கு பரிந்துரைத்துள்ளார்.
இந்தியாவில் மேலும் 2,85,914 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து, 2,99,073 பேர் குணமடைந்தனர்.
73வது குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Chennai | Tamil Nadu Governor RN Ravi and CM MK Stalin take part in 73rd #republicday celebrations pic.twitter.com/P8R9z1x1u8
— ANI (@ANI) January 26, 2022
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்திய காவலர்கள் 5 பேருக்கு ”காந்தியடிகள் காவலர் பதக்கம்” வழங்கப்பட்டது. பதக்கம் பெறும் 5 காவலர்களுக்கும் ரூ. 40,000க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இன்று சென்னையில் நடைபெற்ற 73வது குடியரசு தின விழாவில், நவம்பர் வெள்ளத்தின் போது உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கி சென்ற கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மற்றும் திருவொற்றியூர் கட்டட விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய தனியரசுவுக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கெளரவித்தார்.
இந்திய விமானப் படையும், தூர்தர்ஷனும் குடியரசு தின விழா ஒளிபரப்பில் புதிய அம்சத்தைக் கொண்டுவர இணைந்துள்ளன.
முதன்முறையாக, இந்த ஆண்டு மிகப்பெரிய ஃப்ளைபாஸ்டில் பங்கேற்கும் மூன்று சேவைகளைச் சேர்ந்த 75 விமானங்களில் சிலவற்றில், பைலட் வியூ மற்றும் காக்பிட் வியூ வழங்கும் கேமராக்களிலிருந்து நேரடி லைவ் இருக்கும்.
இந்தியாவின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் விரைவில் தேசிய போர் நினைவிடத்தை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
आप सभी को गणतंत्र दिवस की हार्दिक शुभकामनाएं। जय हिंद!Wishing you all a happy Republic Day. Jai Hind! #republicday
— Narendra Modi (@narendramodi) January 26, 2022
இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர், கடும் குளிரில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 16,000 அடி உயரத்தில் இந்தியக் கொடியை ஏற்றினர்..
#justin: Indo-Tibetan Border Police (ITBP) personnel celebrating the #republicday2022 at 16,000 feet in Himachal Pradesh. Video provided by the ITBP. @IndianExpress,@ieDelhi pic.twitter.com/bw4TE0wwzA
— Mahender Singh Manral (@mahendermanral) January 26, 2022
வேதாரண்யம் அருகே ஆற்காட்டுத்துறை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் மீனவர்களிடமிருந்து ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. மறைந்த முதல் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.