Tamilnadu RTI online: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கம் நடைமுறையை தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசு அலுவலகங்களிலும்,அரசு நிறுவனங்களிலும் வெளிப்படைத் தன்மை,பொறுப்புடைமை,ஊழலை கட்டுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக தகவல் உரிமை சட்டம் 2005 இயற்றப்பட்டது. பதிவேடு, ஆவணம், அறிக்கை,மெமொ, சுற்றறிக்கை முதலான ஏதேனும் வடிவில் அரசு அலுவலகத்தில் இருக்கும் பொருளை கேட்டுப் பெறுவது இந்த சட்டத்தின் மூலம் குடிமக்களுக்கு உரிமையாகிறது.
இதுவரையில், தமிழகத்தில் டைப் செய்யப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பொதுத்தகவல் அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. நிர்ணயிக்கப்பட்ட பல்வேறு கட்டண விகிதங்களை மக்கள் அஞ்சல் பணவிடையாக, கேட்புக் காசோலையாக, வங்கி வரைவோலையாக சம்ர்ப்பிக்க வேண்டியிருந்தது. இதற்கு அதிக நேரம் செலவாகுவதாக ஆர்டிஐ பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/05/RTi.jpg)
மேலும், விண்ணப்ப மற்றும் கட்டண செயல்முறையை ஆன்லைனில் கொண்டு வந்தால் மட்டுமே அடித்தட்டு மக்களும் தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்த முன்வருவார்கள் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்களை இடைவிடாது எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், பிரிவு 6(1) கீழ் வரும் RTI விண்ணப்பங்கள் மற்றும் பிரிவு 19(1)-ன் கீழ் வரும் முதல் மேல் முறையீட்டு விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்ற சுற்றறிக்கையை பணியாளர் (ம) நிர்வாகம் சீர்திருத்தம் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்ணா வெளியிட்டார். இதன் மூலம் ஆன்லைனில் மக்கள் விண்ணப்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.
மென்பொருளின் சோதனை முயற்சியாக, தற்போது பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் மட்டும் இந்த ஆன்லைன் செயல்முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது . செயல்திறனைக் கண்டறிந்த பின்னர், பள்ளி கல்வித் துறை போன்ற பிற முக்கியத் துறையில் செயல்படுத்தப் படுகிறது. மென்பொருள் சோதனைக்குப் பிறகு, பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் பிரத்தியோக ஆன்லைன் போர்ட்டல் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, மகாராஷ்டிரா, மேகாலயா, ஒரிசா , உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே ஆன்லைன் விண்ணப்பங்களை அனுமதிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.