scorecardresearch

‘ஆளுனர் நிறைய விஷயங்களை கேட்டார்; ஆதாரம் திரட்டிக் கொண்டு மீண்டும் சந்திப்பேன்’: ராஜ் பவன் வாசலில் சவுக்கு சங்கர் பேட்டி

திமுக அரசின் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சவுக்கு சங்கர் ஆளுனரை சந்தித்து புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

‘ஆளுனர் நிறைய விஷயங்களை கேட்டார்; ஆதாரம் திரட்டிக் கொண்டு மீண்டும் சந்திப்பேன்’: ராஜ் பவன் வாசலில் சவுக்கு சங்கர் பேட்டி

தமிழக முதல்வர், அமைச்சர் உதயநிதி மற்றும் உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி ஆகியோர் மீது ஆதாரத்துடன் ஆளுனரிடம் புகார் அளித்துள்ளதாகவும், வேறு சில தகவல்களை சேகரித்த பின் மீண்டும் ஆளுனரை சந்திக்க உள்ளதாகவும், சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் பிரபல அரசியல் விமர்சகரும் பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர், தி.மு.க ஆட்சி குறித்தும், முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இதனிடையே திமுக அரசின் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சவுக்கு சங்கர் ஆளுனரை சந்தித்து புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

மேலும் இந்த சந்திப்பு இன்று (ஜனவரி 31) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் இது குறித்து ஆளுனர் மாளிகை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனாலும், வெளியான தகவலின் படி இன்று மாலை சவுக்கு சங்கர் ஆளுனரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், ஆளும் கட்சியான திமுக குறித்து பல்வேறு ஊழல் புகார்களை ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஆளுனர் மாளிகை முன்பு செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் கூறுகையில்,

நான் கொடுத்த புகாரில் பல விஷயங்களை பார்த்து ஆளுனர் ஆச்சரியடைந்தார். விடியற்காலை 1.30 மணிக்கு தியேட்டரில் படம் திரையிடப்படுகிறது என்பதே ஆளுனருக்கு தெரியவில்லை. 1.30 மணிக்கு ஷோ போட்டு அதில் வினோத் என்ற வாலிபர் இறந்துவிட்டதாக சொன்னேன். பொங்கல் தினத்தில் வெளியான இரண்டு படங்களுக்கும் டிஸ்டிபியூட்டர் ரெட் ஜெயண்ட் உதயநிதிதான் என்பதையும் சொன்னேன்.

மேலும் பெரிய படம் எது வந்தாலும் அவர்தான் டிஸ்டிபியூட்டர் என்று சொன்னேன். பொங்கல் பண்டிகைக்கு வெளியான வாரிசு துணிவு ஆகிய இரண்டு படங்களுக்கும், சிறப்பு காட்சிக்கு அனுமதி ஜனவரி 11-ந் தேதி இரவு 8.30 மணிக்குதான் கொடுக்கப்பட்டது. ஆனால் 11ந் தேதி அதிகாலை 1.30 மணிக்கே தியேட்டர்களில் 7 ஷோ 8 ஷோ படம் திரையிடப்பட்டது.

10-ந் தேதி தமிழக உள்துறை செய்யலாளர் பனீந்தர் ரெட்டி தமிழகத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவரது உத்தரவை மீறி 7 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. இவ்வாறு படங்கள் வெளியான பிறகு மறுநாள் தான் சிறப்பு காட்சிக்கு அனுமதி என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை மதிக்காமல், தியேட்டர்கள் இந்த மாதிரி செய்ததற்கான காரணம், இந்த திரைப்படத்தை விநியோகம் செய்தது முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் என்பதுதான்.இந்த சிறப்பு காட்சிக்கு தாமதாமாக அனுமதி கொடுத்ததன் மூலமும், சிறப்பு காட்சிகளுக்காக டிக்கெட் விலை 1000 முதல் 3 ஆயிரம் வரை விற்பனை செய்ததன் மூலமும், தனது மகனுக்கு பலகோடி ரூபாய் லாபத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தனது அதிகாரத்தை துஷ் பிரயோகம் செய்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி, உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடுமாறு ஆளுனரிடம் புகார் அளித்துள்ளேன். மேலும் சில தகவல்களை ஆளுனர் என்னிடம் கேட்டுள்ளார். அவற்றை சேகரித்தவுடன் மீண்டும் ஆளுனரை சந்திக்க வாய்ப்பு உள்ளது. நான் சொன்ன தகவல் உண்மைக்கு மாறாக இருந்தால் என்மீது அவதூறு வழக்கு பதிவு செய்யுங்கள் என்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu savukku shankar meet tn governor in gundy raj bhavan

Best of Express