தமிழகத்தில் வருடம் தோறும் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன்-01-ம் தேதி பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்தாண்டு கோடை வெயில் மே மாதத்தை கடந்து ஜூன் மாதத்திலும் அனல் பறப்பதால் பெற்றோர் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு ஜூன் 12-ல் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலும், ஜூன் 14-ல் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பள்ளிகள் திறப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோடை விடுமுறைக்கு பின் தாமதமாக பள்ளிகள் திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும். போட்டி குறித்த முறையான தகவல் வரவில்லை. 9-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் போட்டியில் பங்கேற்கவில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாக இருந்த அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும். பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும். வரும் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“