ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியில் வகுப்பறையில் பேசாமல் இருப்பதற்காக மாணவர்களின் வாயில் ‘டேப்’ ஒட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஒரத்தநாடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த அக்டோபர் 21-ம் தேதி 4-ம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்களின் வாயில் செல்லோ டேப் ஒட்டி 2 மணி நேரமாக உட்கார வைத்துள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டதற்கு, அவர் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே, இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் மதியழகன் கூறியது: அக்டோபர் 21-ம் தேதியன்று அந்த வகுப்பில் ஆசிரியர் இல்லாததால், ஒரு மாணவரை வகுப்பறையை கவனித்துக் கொள்ளும்படி கூறியுள்ளனர். அந்த மாணவர்தான், வகுப்பறையில் பேசிய மாணவர்களின் வாயில் ‘டேப்’ ஒட்டியுள்ளார். ஆசிரியர்கள் யாரும் ஒட்டவில்லை. இதுகுறித்து விசாரித்து அறிக்கை தர வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியை புனிதாவிடம் கேட்டபோது, ‘‘வகுப்பில் யாரும் பேசக் கூடாது என்பதற்காக வாயில் ‘செலோ டேப்’ ஒட்டியுள்ளனர். பின்னர், அந்த வகுப்புக்கு நான் சென்ற போது, ஒரு மாணவரின் வாயில் மட்டும் ‘டேப்’ ஒட்டப்பட்டிருந்தது. நான் அதை உடனடியாக அகற்றச் சொல்லிவிட்டேன். மாணவர்கள் வாயில் ‘டேப்’ ஒட்டப்பட்டிருந்ததை புகைப்படம் எடுத்தது யார் எனத் தெரியவில்லை. என்னிடமும், மாணவர்களிடமும் வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். அவரிடம் எனது விளக்கத்தை தெரிவித்துள்ளேன்’ என்றார்.
முன்னதாக, இந்த சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி நடந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. அதே பள்ளியில் பணியாற்றி வரும் மூன்றாம் வகுப்பு ஆசிரியை மாணவர்கள் வாயில் செலோ டேப் ஒட்டப்பட்டு இருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்து அவற்றை மாணவர்களின் பெற்றோர் செல்போனுக்கு அனுப்பி உள்ளார்.
புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றார்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று விளக்கம் கேட்டு உள்ளனர். அதற்கு, உங்கள் பிள்ளைகள் வகுப்பறையில் பேசிக் கொண்டு இருந்ததால் செலோ டேப் ஒட்டியதாக தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“