அன்பில் அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு படிப்போம், உயர்வோம் வழிகாட்டுதல் நிகழ்ச்சி; அமைச்சர் அன்பில் மகேஷ் துணைவியாருடன் பங்கேற்பு
12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், கல்வியிலும் வாழ்விலும் வெற்றிகளை பெறவும் அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் நிகழ்ச்சி பெல் பாய்லர் ஆலை வளாகத்தில் உள்ள எம்டி ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அன்பில் அறக்கட்டளையின் சார்பாக அறக்கட்டளையின் இயக்குனர் ஜனனி மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பள்ளி கல்வித்துறை அமைச்சரமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர், பேசுகையில், மாணவர்களாகிய நீங்கள் நடைபெறவுள்ள பொது தேர்வை தைரியமாக எதிர் கொள்ள வேண்டும். நீங்கள் எந்த பள்ளிக்கூடத்தில் படித்தீர்களோ யார் உங்களுக்கு வகுப்பு எடுத்தார்களோ என்ன படித்தீர்களோ அதற்கான கேள்வியாக வரும்போது அதற்கான பதிலைத்தான் நீங்கள எழுத போகிறீர்கள். எந்த வகுப்பறையில் உங்கள் நண்பர்களுடன் படித்தீர்களோ அந்த வகுப்பறையில் தான் அமர்ந்து நீங்கள் தேர்வு எழுத போகிறீர்கள்.
இதை ஒரு தேர்வாகத்தான் நாம் பார்க்க வேண்டுமே தவிர, பொது தேர்வு என நினைத்து மன அழுத்தத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. யாரேனும் உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுத்தால் அதற்கு மாணவர்களாகிய நீங்கள் இடம் கொடுக்காமல், படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும், மேலும், பொது தேர்வு என்று இரவு நேரங்களில் உறங்காமல் கண்விழித்து படித்துவிட்டு மறுநாள் தேர்வு அறையில் தூங்கி விடக்கூடாது.
மாணவச் செல்வங்கள் உங்களுக்கு நான் ஒன்றே ஒன்று கூறிக் கொள்வது என்னவென்றால் நீங்கள் கடைபிடிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான் அது நேர கட்டுப்பாடு. இந்த நேரத்தில் படிக்க வேண்டும், இந்த நேரத்தில் உறங்க வேண்டும் என்று நீங்களே நேரத்தை வகுத்துக் கொண்டு உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தற்போது உயர் கல்வியை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு உங்களின் தந்தையாக தமிழக முதல்வர் கொண்டுவந்துள்ள மகத்தான திட்டம் தான் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம்.
இந்த திட்டத்தின் மூலம் மாணவ மாணவிகள் ஆயிரம் ரூபாய் பயன் பெற்று தங்களது கல்வியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு பயன்பெற்று வருவதாகவும் எனவே மாணவச் செல்வங்களாகிய நீங்கள் தைரியமாக தேர்வு எதிர்கொள்ள வேண்டும் எனப் பேசினார்.
க.சண்முகவடிவேல்