க.சண்முகவடிவேல்
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்வி அலுவலகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் திருச்சியில் தனது தொகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் 234/77 ஆய்வுப் பயணத்தில் 11’வது தொகுதியாக திருச்சி கிழக்கு தொகுதியில் வைகவுண்டஸ் அரசு மகளிர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, 12’வது தொகுதியாக திருவெறும்பூர் தொகுதி பொன்மலைப்பட்டி, திருஇருதய அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பள்ளிகளில் கணினி அறை, ஆய்வகம் , நூலகம், மாணவ மாணவிகள் பயன்படுத்தும் கழிவறை, பள்ளியின் கட்டிடங்கள் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மழைக்காலத்தில் பள்ளிகளில் இருக்கும் ஆவணங்களை பாதுகாப்பாக வைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளோம். பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரை அகற்றுவதற்கும் ஏற்ற அறிவுரைகளை வழங்கியிருக்கிறோம்.

234 தொகுதிகளிலும் கல்வித்துறை சார்ந்த பள்ளிகள், கல்வி அலுவலகங்கள், தனியார் பள்ளிகளின் 77 வகையான உள்கட்டமைப்பு, கல்வித்துறையின் திட்டப்பணிகள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா? என்பது தொடர்பாக நான் ஆய்வு செய்ய இருக்கிறேன். துறை சார்ந்த அமைச்சர் இதுபோன்ற ஆய்வு செய்யும்போது, அதிகாரிகளும் அதனைத்தொடர்ந்து ஆய்வை மேற்கொள்வதற்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்ற அடிப்படையில், இந்த ஆய்வுகளை மேற்கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் உள்ள 58 ஆயிரம் பள்ளிகளிலும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அந்த வகையில் தான் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறேன். மேலும் இந்த ஆய்வு பள்ளிக்கல்வித்துறைக்கு தேவையான வசதிகளை பூர்த்தி செய்ய மேலும் நிதியை ஒதுக்குவதற்கு ஒரு அடித்தளமாகவும் அமையும் என கருதுகிறேன் என கூறியுள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற இந்த ஆய்வுப் பணியின் போது கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாநகர செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட பள்ளி கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளும் அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர். தீபாவளி நேரத்தில் இந்த ஆய்வு என்பது அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil