Tamilnadu News Update : திருமண மண்டப திறப்பு விழா நிகழ்ச்சியை கொரோனா விழிப்புணர்வு கூட்டம் என்று சொல்லி முதல்வரிடம் தப்பித்துக்கொள்வேன் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நகைச்சுவையாக பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வதுஅலை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா தொற்றுடன் சேர்ந்து அதன் உருமாறிய வகையான ஒமைக்ரான் தொற்று பாதிப்பும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த நவம்ர் மாதம் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று டெல்டா வைரஸ் தொற்றை விட வேமான பரவும் திறன் கொண்டது.
தற்போது ஒமைக்ரான் தொற்று இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று கூறி மாநில அரசுக்கு மத்திய சுகதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமயான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசில் மற்றும் மத ரீதியான பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தடை விதித்துள்ள அரசு, பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியயை பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடி அருகே வள்ளகரத்தில், திருமண மண்டப திறப்பு விழா நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில மகேஷ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு பேர் கூடியுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்றது குறித்து முதல்வர் என்னிடம் கேள்வி கேட்பார். தடுப்பூசி செலுத்துவதில் மயிலாடுதுறை மாவட்டம் பின்தங்கியுள்ளதால், இது கொரோனா விழிப்புணர்வு கூட்டமாக நடத்தப்பட்டது என்று தப்பித்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார். இந்த கூட்டம் மாநாடு போன்று நடப்பதாக கூறிய தலைமை கொறடாதான் தமிழக முதவருக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதது குறித்து அன்பில் மகேஷ் நகைச்சுவையாக பேசினார்.
அவரின் இந்த பேச்சு அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியபோதும், இந்த விழாவில், உத்தரவை மீறி அதிக கூட்டம் கூடியாதாகவும், கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றவில்லை என்றும் கடுமையாக விமர்சனங்கள் எழுத்துள்ளது. மேலும் அன்பில் மகேஷின் நகைச்சுவை பேச்சுக்கு நெட்டிசன்கள் பலரும் கொரோனா ஒன்றும் சிரித்துவிட்டு கடந்து சொல்லக்கூடிய அளவுக்கு சாதாரணமானது அல்ல என்றும் கூறி வருகின்றனர்.
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சிக்கும் அளவுக்கு அதகமாக கூட்டம் சேர்ந்தது குறித்து பலரும் விமர்சனங்களை கொடுத்தனர். தற்போது அதே நிலை அன்பில் மகேஷ் நிகழ்ச்சியிலும் நடைபெற்றுள்ளதால், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் மற்றவர்களுக்குதானா ஆளும் கட்சிக்கு கிடையாதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil