School Reopening Update : இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரித்ததால், ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டது. இதற்கு இடையில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டாலும், பள்ளி மற்றும் கல்லூரி திறப்பதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதனால் மாணவர்களில் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்பதால், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. மேலும் தமிழக அரசு சார்பில், தொடங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தாக்கத்தின் வீரியம் சற்று குறைந்த நிலையில், பள்ளி கல்வி திறப்பது தொடர்பாக மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ஒரு சில மாநிலங்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் ஓரிரு நாட்களில் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், மீண்டும் பள்ளிகள் திறக்க அந்தந்த மாநிலங்கள் தடை விதித்தன. ஆனால் அப்போது தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக எவ்வித அறிவிப்பு வெளியிடவில்லை. அதற்கடுத்து ஓரிரு மாதங்களுக்கு பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் சம்மத்த்துடன் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்தது.
ஆனாலும் இந்த அறிவிப்பு முழுமையாக மக்களிடம் சென்றடையவில்லை. இதனால் பள்ளிகளில் ஓரிரு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து சென்றனர். இதில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கினர். இதனால் தமிழக அரசின் இந்த அறிவிப்பு எவ்வித பயனையும் அளிக்கவில்லை. இதனையடுத்து பல மாதங்கள் பள்ளிகள் திறப்பது தொடாபான எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படவேண்டிய அரையாண்டு தேர்வும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதில் விருப்பப்பட்டால், தனியார் பள்ளிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் அரையாண்டுத்தேர்வை நடத்தக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவில் ஒரு சில உத்தரவு மட்டுமே அமலில் உள்ள நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர். இதில் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பள்ளிகள் எப்போது திறக்கலாம் என்பது குறித்து பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என பள்ளக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தொடர்ந்து கடந்த வாரம் (ஜனவரி 06 முதல் 08 வரை) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க அதிகமான பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து வரும் 19-ந் தேதி முதல் 10, மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும மாணவர்களின் விடுதிகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணாக்கர்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை அளிக்குமாறு தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.