குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர் என் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல், நம்முடைய பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் கற்றுக்கொள்வது முக்கியமாகும்.பிற இந்திய மொழிகளின் அறிவை, நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது அவ்வளவு சரியில்லை.
சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை வளர்ப்பதோடு, மொழிரீதியான அறிவு மற்றும் பண்பாட்டு இடைச் சேர்க்கை, நம் அனைவரையுமே வளப்படுத்தும், நாட்டைச் செம்மைப்படுத்தும். ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்கு வழியமைக்கும்.
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே இப்போதைய உடனடித் தேவை. அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இடையிலான எதிர்மறை வேறுபாடுகள் கவலையைத் தோற்றுவிக்கின்றன என்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும், நீட் தேர்வுக்கு முன்னதான காலத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்திருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் காரணமாக, இத்தகைய எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
எனினும், அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவேண்டியது நம்முடைய அவசரத் தேவை. உயர்கல்வியிலும், ஒருகாலத்தில் நம்முடைய பல்கலைக்கழகங்களுக்கு இருந்த பெயரையும் பெருமையையும் மீண்டும் பெறுவதற்கு நாம் உழைக்கவேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil