தமிழகத்தின் அட்வகேட் ஜெனரலாக இருந்த மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய அட்வகேட் ஜெனராலாக மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பொறுப்பேற்றக் கொண்டார்.
தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட திடீர் கருத்து வேறுபாடு தொடர்பாக முதல்வர் நேரடியாக தலையிட்டு பேசிய நிலையில், அட்வகேட் ஜெனரலாக இருந்த ஆர்,சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அடுத்து புதிய அட்வகேட் ஜெனரல் யார் என்பது குறித்து கேள்வி எழுந்த நிலையில், நேற்று முன்தினம் (வெள்ளி) பி.எஸ்.ராமன் புதிய அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுனர் அலுவலகம் அறிவித்தது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட பி.எஸ் ராமன், 2004 ஆம் ஆண்டு முதல் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு 2009 மற்றும் 2011 க்கு இடையில் அவர் அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்திருந்த நிலையில், தற்போது 2-வது முறையாக அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் பி.எஸ்.ராமன் தமிழ்நாடு முன்னாள் அட்வகேட் ஜெனரல் மற்றும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி ராமனின் மகன் ஆவார்.
நவம்பர் 7, 1960-ல் பிறந்த பி.எஸ்.ராமன், சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டமும், 1984 இல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டமும் பெற்றார். தொடர்ந்து 1989 இல் அவரது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, அவர் ராமன் அன்ட் அசோசியேட்ஸ் என்ற சட்ட நிறுவனத்தை நிறுவினார். இதன் மூலம் அவர் பல முக்கியமான அரசியலமைப்பு, சிவில், வணிக, குற்றவியல், சொத்து சட்டம், மறைமுக வரி மற்றும் அறிவுசார் சொத்து விவகாரங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
2006ல் திமுக அரசால் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 2009ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவரை அட்வகேட் ஜெனரலாக உயர்த்தினார். 2011 ஆம் ஆண்டு மாநிலத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ராமன் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“