சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே, மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் அந்த பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மான் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தார். தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காவலாளியான இவர், கடந்த ஜூன் 27-ந் தேதி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த மதுரை மாவட்டத்தில் இருந்து தனது தாயருடன் வந்த நிகிதா என்பவருக்கு உதவி செய்துள்ளார்.
அப்போது நிகிதா தனது கார் சாவியை அஜித்குமாரிடம் கொடுத்து பார்க்கிங் செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் கார் ஓட்ட தெரியாத அஜித்குமார் அடுத்தவர் உதவியுடன் அந்த காரை பார்கிங் செய்துள்ளார். அதன்பிறகு சாவியை நிகிதாவிடம் கொடுத்துள்ளார். தரிசனம் முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட நிகிதா, காரில் ஏறும்போது பையில் இருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ2200 பணம் காணவில்லை என்று அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து கோவிலில் பணியாற்றிய அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அஜித்குமாரை மட்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீசார் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளர். இதில் போலீஸ் விசாரணையில் அஜித்குமார் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோவில், காக்கிச் சட்டை அணியாமல் இருக்கும் தனிப்படை காவலர்கள், இளைஞரை பிளாஸ்டிக் பைப் ஒன்றால் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் வகையில் இந்த வீடியோ உள்ளது. இதனால் போலீசார் தாக்கி தான் அஜித்குமார் இறந்தார் என்று கூறி வருகின்றனர்.
இதனிடையே, அஜித்துக்கு கஞ்சா கொடுத்துதான் போலீசார் அடித்தனர்; போலீசார் தாக்கும்போது நான் அருகில்தான் இருந்தேன்; அஜித் மீது கஞ்சா வாசனை வந்தது நீரில் மிளகாய் பொடி கலந்து அஜித்துக்கு கொடுத்தனர்; முகத்திலும் மிளகாய் பொடியை தடவினர் என்று அஜித் குமாரின் நண்பர் மனோஜ் பாபு கூறியுள்ளார். இதனால் இளைஞர் அஜித்குமாரின் மரணம் தொடர்பான வழக்கு பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.