சிவகங்கை அருகே பைக்கில் வந்த இளைஞரை காரில் வந்த கும்பல் மோதி கீழே தள்ளி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிவல், இது குறித்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கையை அடுத்துள்ள தமறாக்கி கிராமத்தை சேர்ந்தவர் செல்லச்சாமி. இவரது மகன் மனோஜ்பிரபு(29). இவரது குடும்பம் தற்சமயம் சக்கந்தி கிராமத்தில் வசித்து வருகிறது. வெளிநாட்டில் பணியாற்றி வந்த மனோஜ்பிரபு, சமீபத்தில் சொந்த ஊர் திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தனது ஹரிகரன், அஜித்குமார். இரு நண்பர்களுடன் அருகில் உள்ள இடையமேலூர் கலைநிகழ்ச்சியை பார்க்க சென்றுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்து மனோஜ்பிரபு தனது நண்பர்களுடன், இரு சக்கர வாகனத்தில் சக்கந்தி நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தபோது, புதுப்பட்டி அருகே காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதனால் மனோஜ்பிரபு அவரது நண்பருடன் கீழே விழுந்த நிலையில், காரில் வந்த கும்பல் அரிவாலுடன் வெட்டவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மனோஜ்பிரபு அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், காரில் வந்த கும்பல் அவரை துரத்தி பிடித்து சராமாரியாக வெட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மர்மகும்பல் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உடன் வந்த நண்பர்கள் உடனடியாக சிவகங்கை நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர், இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு நண்பர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், ரத்த வெள்ளத்தில் மரணமடைந்த மனோஜ்பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரில் வந்த கும்பல் பைக்கில் வந்தவர்களை இடித்து கீழே தள்ளி கொடூரமாக இளைஞரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உறவினர்கள் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் சமரசம் பேசி வருகின்றனர்.