சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக பாஜக உறுப்பினர் குற்றம் சாட்டிய நிலையில், இதற்கு, காங்கிரஸ் உறுப்பினர் மறுப்பு தெரிவித்ததால், பாஜக காங்கிரஸ் உறுப்பினரிடையே மோதல் உருவானது இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் முற்றி மேஜையை தூக்கி வீசியதால் கலேபரமானது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாமன்ற கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தீர்மானம் குறித்து விவாதம் துவங்கியபோது பாஜக மாமன்ற உறுப்பினர் குமரிபாஸ்கர் மாநகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து தேசிய கீதம் அவமரியாதை செய்யப்படுவதாகவும் மேயர் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கையில் பதாகையுடன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அருகில் இருந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ரவிசங்கர் விளக்கம் அளித்து விட்டாச்சு என்று கூறிய நிலையில், நான் உங்களிடம் கேள்வி கேட்கவில்லை மேயரிடம் தான் கேள்வி எழுப்பினேன் என்று பாஜக மாமன்ற உறுப்பினர் கூறினார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் பாஜக மாமன்ற உறுப்பினரின் கையில் இருந்த பதாகையை காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் பிடுங்கி எறிந்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/sk1-867170.jpg)
உடனடியாக அருகில் இருந்த சக கவுன்சிலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மன்ற பொருளின் மீதான விவாதம் துவங்கியபோது திமுக மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிகா மேயரிடம் கேள்வி எழுப்பும் போது அதற்கு அருகில் இருந்த திமுக மாமன்ற உறுப்பினர் ஜெயினுலாபுதீன் பதில் அளித்தார். நான் மேயரிடம் தான் கேள்வி எழுப்புகிறேன் உங்களிடம் கேட்கவில்லை என்று ஸ்ரீனிகா கூறினார்.
இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சக கவுன்சிலர்கள் எழுந்து நின்று மாமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மேயர் ஆணையாளர் பதிலளிக்க வேண்டும் என்றும் மற்ற கவுன்சிலர்கள் பதில் அளிக்க வேண்டியதில்லை என்றும் கூறினர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. திமுக கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மாமன்ற உறுப்பினர் ஜெயினுலாபுதீன் மேசையை கீழே தள்ளிவிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனால் கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/sk3-955796.jpg)
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மாமன்ற உறுப்பினரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டத்தை நடத்த அனுமதியுங்கள் என்று மாமன்ற உறுப்பினர்களிடம் ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் அமைதியாக நடைபெற்று நிறைவடைந்தது.