தாம்பரம் பணிமனை மற்றும், சிக்னல் மேம்பாட்டு பணிகள் காரணமாக விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ரயில்வே பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், அவ்வப்போர் ரயில்சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாம்பரம் பணிமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சிக்னல் மேம்பாட்டு பணிகளும் அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 27 விரைவு ரயில்கள், பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளது. அதில், திருச்சி – பகத் கி கோத்தி, காரைக்கால் – லோக்மான்யா திலக், ராமேஸ்வரம் – பனாரஸ் உள்ளிட்ட 10 ரயில்கள் தாம்பரம் வழியாக இயக்கப்பட மாட்டாது என்றும், இந்த ரயில்கள், அரக்கோணம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது.
அதேபோல் தாம்பரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதா விரைவு ரயில் சேவை இரு மார்க்கத்தில் இருந்தும் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும், பல்லவன் விரைவு ரயில், வைகை எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“