கோவை நேரு விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த அடிக்கல் நாட்டுவதற்காக வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க திமுகவினர் குவிந்தனர்.
தமிழகத்தில் தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலின் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், அமைச்சராக பதவி ஏற்று முதல் முறையாக கோவைக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் இன்று 3 அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

முதல் நிகழ்ச்சியாக கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழை ஓடுபாதை அமைத்தல் பணிக்காக 6.55 கோடியும் மற்றும் விளையாட்டு அரங்கை மேம்படுத்த சிறப்பு மராமத்து பணிகளுக்காக 65.15 லட்சம், மதிப்பிலான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதற்காக இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார்.இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் தலைமையில் அரசு அதிகாரிகளுடன் புதிய திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து கோவை கொடிசியா மைதானத்தில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
பி.ரஹ்மான் கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/