நாகை துறைமுகத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீா்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சா் சா்பானந்த சோனாவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழக சிறு துறைமுகங்கள் அமைச்சா் எ.வ வேலு, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனா்.
காணொலி வாயிலாக கப்பல் சேவையை தொடக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் வணக்கம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா- இலங்கை இடையே தூதரக, பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறோம். இந்தச் சூழலில் இலங்கை காங்கேகசன்துரை - இந்தியாவின் நாகப்பட்டினம் இடையேயான கப்பல் போக்குவரத்து இருநாட்டு உறவையும் வலுப்படுத்துவதில் மிக முக்கியமான மைல்கல்.
/indian-express-tamil/media/media_files/LhZc8d9Dqxj0ZGq7Bfyb.jpeg)
இந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் சேவையானது போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதோடு, வர்த்தகத்தையும் வளர்க்கும். இருநாடுகளுக்கும் இடையேயான நீண்ட கால உறவை வலுப்படுத்தும்" என்று கூறினார். இந்தியா - இலங்கை இடையேயான கடல்வழிப் போக்குவரத்துக்கு, சங்க இலக்கியங்கள் பட்டினப்பாலை, மணிமேகலையில் சான்று இருப்பதாக பிரதமர் மோடி மேற்கோள் காட்டிப் பேசினார்.
/indian-express-tamil/media/media_files/UdL0B0LTgN341pLJXYnQ.jpeg)
நாகையிலிருந்து காங்கேசன் துறைக்குச் செல்ல ரூ.7,670 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவை முன்னிட்டு, இன்று ஒரு நாள் மட்டும் கட்டணச் சலுகையாக, இலங்கை செல்லும் பயணிகளுக்கு (சிங்கிள் ட்ரிப்) டிக்கெட் விலை ரூ.3000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இலங்கையில் இருந்து நாகைக்குவர வழக்கம்போல ரூ.7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணம் ஜி.எஸ்.டி வரி உட்பட ரூ.7,670 ஆகும். 150 பயணிகள் வரை பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ள ‘செரியபானி’ எனப் பெயரிடப்பட்ட கப்பலில் இன்று 50 பயணிகள் இலங்கைக்குப் புறப்பட்டனர்.
/indian-express-tamil/media/media_files/Tfi0DNitLehadblJAVoD.jpeg)
நாகையில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறையை இந்த கப்பல் 3.30 மணி நேரத்தில் சென்றடையும். இந்த கப்பல் நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் தினமும் தலா ஒருமுறை இயக்கப்படும். இந்தக் கப்பல் பயணத்தின்போது பயணிகள் அதிகபட்சம் 52 கிலோ எடை கொண்ட உடைமைகளை எடுத்துச் செல்ல முடியும். இந்தப் பயணிகள் கப்பல் அன்றாடம் காலை 8.15 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன்துரை துறைமுகத்துக்கு சென்றடையும். அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும்.
/indian-express-tamil/media/media_files/pvnrEu8JhV9mpSWtsGho.jpeg)
துறைமுகத்துக்குள் வரும் நபா்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். ஏற்கெனவே இரண்டு முறை கப்பல் போக்குவரத்து சேவைக்கான தேதி அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்ட நிலையில், மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே இன்று புரட்டாசி சனிக்கிழமை, மஹாலய அமாவாசை தினத்தில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“