/indian-express-tamil/media/media_files/2025/07/22/russia-student-2025-07-22-12-00-43.jpg)
ரஷ்யா நாட்டிற்கு படிக்க சென்ற ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த மருத்துவ மாணவரை பொய் வழக்கில் கைது செய்து போருக்கு அனுப்ப அந்த நாட்டு போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும், மாணவனை மீட்க வேண்டும் என்று பெற்றோர் மத்திய, மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை கீழ்ப்பாதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கிஷோர் (23). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ரஷ்யாவில் மருத்துவ படிப்பிற்காக சென்றார். அப்போது எடப்பாடியைச் சேர்ந்த நித்திஷ் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அறை எடுத்து தங்கினர். கிஷோர் மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பை படித்து வந்துள்ளார்.
இதனிடையே, படிப்பு செலவுக்காக கிஷோர், நித்திஷ் இருவரும் ஒரு கொரியர் நிறுவனத்தில் பகுதிநேர வேலைக்கு சேர்ந்துள்ளனர். அப்போது வாடிக்கையாளர்களிடம் பொருட்களை டெலிவரி செய்யும்போது அதில் ரஷ்ய நாட்டில் தடை செய்யப்பட்ட பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அந்நாட்டு காவல்துறையினர் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த தகவல் கிஷோரின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை ஜாமீனில் எடுத்து, இந்தியா அழைத்து வரவும் ஏற்பாடு செய்து வந்தனர். இந்நிலையில் ரஷ்ய நாட்டு காவல்துறையினர் அவர்களை உள்நாட்டில் நடைபெறும் உக்ரைன் போருக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டு, வலுக்கட்டாயமாக தனி அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்து, அவர்களிடம் ஆவணத்தில் கையெழுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தனது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளது, என்னை போருக்கு அனுப்பினால் உயிருக்கு பாதுகாப்பில்லை; எப்படியாவது என்னை மீட்டுவிடுங்கள் என்று கிஷோர் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், எனது மகனை ரஷ்யா சிறையிலேயே வைத்து விடுங்கள். போருக்கு அனுப்ப வேண்டாம். உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கிஷோரின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ரஷ்ய ராணுவத்தில் கட்டாயமாகச் சேர்த்து உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்தியர்கள் 80 பேர் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் கடந்த ஆண்டு மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். அதேபோல், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் என்பவர் உள்ளிட்ட மாணவர்களையும் மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து கிஷோர் தந்தை சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் டிரைவராக பணியாற்றுகிறேன். எனக்கு பாமா என்ற மனைவியும், கிஷோர் (22) என்ற மகனும் உள்ளனர். கிஷோர் ரஷ்யாவுக்கு கடந்த 2021-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்காக சென்றார். தற்போது வழக்கில், சிக்கிய ரஷ்ய மாணவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், கிஷோரை விடுவிக்க முடியவில்லை. கிஷோர், நித்தீஷ் ஆகிய இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
எங்கள் மகன், தான் பேசிய அனுப்பியுள்ள ஆடியோவில், எங்கள் மகனை உக்ரைன் நாட்டுக்கு எதிரான போருக்கு செல்ல போலீஸார் மிரட்டி வருகின்றனர். இதற்காக ரஷ்யாவில் போர்க்களத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கிறார்கள். மேலும் ஆவணம் ஒன்றிலும் மிரட்டி கையெழுத்து பெற்றுள்ளனர். அவனுக்கு ரஷ்யா அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
10 நாட்கள் பயிற்சி முடித்ததும், போர்க்களத்துக்கு அனுப்பி விடுவார்கள் என்ற தகவல் வந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், எங்கள் மகனைக் காப்பாற்றி, சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். ரஷ்யாவில் கைதாகி வெளிவர முடியாமல் சிக்கித் தவிக்கும் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோரை மீட்கக்கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெற்றோர், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.