நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்த ஆண்டுக்கான மருத்துவ பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மே 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு எழுதுபவர்கள் தங்கள் மாநிலத்தில் ஏதேனும் 3 தேர்வு மையங்களை குறிப்பிடலாம். அதில் ஒன்று ஒதுக்கப்படும் என தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கணினி மூலம் ஒதுக்கப்படும் இந்த தேர்வு மையங்களை மாற்ற முடியாது. இதனால் புதிதாக நீட் தேர்வு எழுத அண்டை மாநில தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள், சிரமங்களை சந்திக்க நேரிடலாம். எனவே இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும் சிபிஎஸ்இ உத்தரவுக்கு நீதிமன்றம் தடையும் விதித்தது.
இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நேற்று சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில் தமிழகத்தில் உள்ள நீட் தேர்வு மையங்கள் நிரப்பப்பட்ட பிறகே , பிற மாநில தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தேர்வு மையங்களுக்கு தேவையான நீட் வினாத்தாள்களை ஏற்கனவே அனுப்பிவிட்டதால் தற்போது தேர்வு மையங்களை மாற்றுவதால் குழப்பம் ஏற்படும் என்று கூறி உயர்நீதிமன்ற உத்தரவை சிபிஎஸ்இ எதிர்த்தது.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் தனது தீர்ப்பில், "தமிழக மாணவர்கள் இந்தாண்டு அண்டை மாநிலங்களில் சென்று தான் நீட் தேர்வு எழுத வேண்டும். அதுமட்டுமின்றி, இனிமேல் தமிழக மாணவர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், சிஇஎஸ்இ தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.