கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழ் சைவ ஆகம விதிகளின்படி நடத்தக் கோரி பொன்னுசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் (ஓய்வு) மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (செப். 10) நீதிபதிகள் கிருபாகரன் (ஓய்வு) மற்றும் புகழேந்தி அமர்வு தீர்ப்பு வழங்கினர். அதில்,“உலகிலேயே தமிழ்தான் பழமையான மொழி என்பதற்கு அறிவியல் பூர்வமாகவும் ஏராளமான ஆவணங்களும் ஆதாரங்களும் உள்ளன. மக்களால் பேசப்படும் ஒவ்வொரு மொழியும் கடவுளின் மொழி. ஆனால் கடவுள் ஒரு மொழியை மட்டுமே புரிந்துகொள்கிறார் என்பதை நம்ப முடியாது. எனவே சமஸ்கிருத பாடல்களுடன் தமிழ் பாடல்கள் மற்றும் கீர்த்தனங்களை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
தீர்ப்பில் மேலும் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-
உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான மதங்கள் மற்றும் நம்பிக்கைகள் இருக்கின்றன. அவர்களின் கலாச்சாரம் மற்றும் மதத்திற்கு ஏற்ப வழிபாட்டுத் தலங்கள் மாறுகின்றன. அந்த தலங்களில் கடவுளுக்கு சேவை செய்ய உள்ளூர் மொழி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
சமஸ்கிருதம் மகத்தான பண்டைய இலக்கியங்களைக் கொண்ட ஒரு பழமையான மொழி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நமது நாட்டில், சமஸ்கிருதம் மட்டுமே கடவுளின் மொழி. மற்ற வேறு எந்த மொழியும் சமமானதல்ல என்று நம்ப வைக்கப்படுகிறது. மேலும் சமஸ்கிருத வேதங்களை ஓதினால் மட்டுமே, பக்தர்களின் பிரார்த்தனையை கடவுள்கள் கேட்பார்கள் என்று நம்பிக்கையும் பரவுகிறது.
கோவில்களில் தமிழ் பாடல்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைக் காட்டும் பல்வேறு பழங்கால இலக்கியங்கள் உள்ளன. எனவே ஒரு மொழி மட்டும் கடவுளின் மொழி என்று கூற முடியாது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள கோவில்களில் தமிழ் பாடல்களைப் பயன்படுத்த முடியாவிட்டால், அதை வேறு எங்கும் பயன்படுத்த முடியாது.
முக்கியமான மற்றும் பழமையான தமிழ் பாடல்களை அடையாளம் கண்டு ஒருங்கிணைப்பதற்காக தமிழ் அறிஞர்கள் மற்றும் பக்தர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இக்குழு நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும்.அந்த அறிக்கையைப் பெற்றதும், கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான முடிவை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கிருபாகரன் (ஓய்வு) மற்றும் புகழேந்தி கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.