Today Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 காசுகளாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 காசுகளாவும் உள்ளது.
Rain Update: கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, மதுரை, திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்று(வியாழக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற உள்ளது. இது மேலும் வடமேற்கு திசை நோக்க்கி நகர்ந்து, வரும் நாட்களில் தமிழகக் கடற்கரை நோக்கி வரும். இதன் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு பலத்தமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய தென் மாவட்டங்களின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Corona Update: இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை, 25 கோடியே 96 லட்சத்து 81 ஆயிரத்து 74 ஆக உள்ளது. இதுவரை உலகம் முழுவது, கொரோனா பாதிப்பால், 51 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, ஒரு கோடியே 96 லட்சத்து 77 ஆயிரத்து 583 ஆக உள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை அதிகம் பாதிப்புள்ள நாடுகளின் முதல் ஐந்து இடத்தில் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
தமிழகத்தில் மழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், விருதுநகர், அரியலூர், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய 11 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்த முடிவு. ஆதார விலைக்கு தனிச்சட்டம், கொரோனா இழப்பீடு உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்
2015 – 16ஆம் ஆண்டு ரூ. 20 லட்சம், 2017 – 18ஆம் ஆண்டு ரூ. 82.12 கோடி வரியாக செலுத்துமாறு ஓபிஎஸ்-க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், ஓபிஎஸ்-க்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்-க்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தொடர்மழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிககி விடுத்துள்ளது. நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் திமுக எம்.பி ரமேஷ் மீதான கொலை வழக்கு விசாரணையைக் கண்காணிக்க விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி.க்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மீனவர்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரெட் அலர்ட்டை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நாளை விடுமுறை அறிவித்தது.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்டை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நாளை விடுமுறை அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற இன்டிகோ விமானம் கனமழை காரணமாக திருச்சியில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் தமிழக சபாநாயகர் அப்பாவு உட்பட 35 பேர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், கடரோல மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கான்பூரில் நடைபெற்று வரும் இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது. அறிமுகபோட்டியில் அரைசதம் கடந்த ஸ்ரோயாஸ் அய்யர் 75 ரன்களுடனும், ஆல்ரவுண்டர் ஜடேஜா, அரைசதம் கடந்து 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மோசனமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து சீரடிக்கு விமானம் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சை, மதுரை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து வரும் நிலையில், 5-வது விக்கெட்டுக்கு அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது முதல் போட்டியிலேயே அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
தமிழில் நடிகர் அஜித்துடன் வரலாறு, விஜயுடன் சர்கார், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், கண்ணா லட்டு திண்ண ஆசையா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் சிவசங்கர் மாஸ்டர், நடன இயக்குநரான இவர் தற்போது கொரோனா தொறறால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிவங்கர் மாஸ்டரின் உடல்நிலை தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது சிகிச்சைக்கு அதிகம் பணம் தேவைப்படும் என்ற நிலையில், பணம் இல்லாததால், அவரை காப்பாற்ற உதவும்படி அவரது மகன் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மண் வாசனை, திருடா திருடி, மகதீரா, பாகுபலி 1 உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ள சிவசங்கர் மாஸ்டர், மகதீரா படத்தில் தீர தீர என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளித்து சட்டம் ஒழுங்கை திமுக அரசு நிலைநாட்ட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்
தமிழகத்தில் அம்மா உணவங்களைப் போல் கூடுதலாக 500 கலைஞர் உணவங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் ஜெவாரில் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
மருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வரையறைகளை 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய தயார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் அரைநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்
அனைத்து வகை சான்றிதழ்களையும் பெற மாணவர்கள் கட்டணத்துடன் 18% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்
அழிவுப் பாதையில் செல்கிறது அதிமுக என ஜே.எம்.பஷீர் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பன்னீர் செல்வத்தின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது என்றும் அதிமுகவில் இருந்து திமுவில் இணைந்த அவர் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்ததால் அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர், மலேசிய நாடுகளுடன் கொரோனா கால விமான போக்குவரத்து ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர நேரடி விமான சேவைகள் இல்லாததால் ஏற்பட்ட இன்னல்களை சுட்டிக்காட்டி முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
கமல் ஹாசன் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையி, கொரோனா தொற்று ஏற்பட்டாலும் நலமாக உள்ளார் என்பது தடுப்பூசியின் செயல்திறனுக்கு நல்ல உதாரணம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சீக்கியர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு சர்ச்சை போஸ்ட் செய்ததைத் தொடர்ந்து டிசம்பர் 6ம் தேதி அன்று டெல்லி சட்டப்பேரவை நல்லிணக்க குழு முன்பு அவர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடலூர், அரியலூர், குமரி, டெல்டா மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை கோயம்பேடு மைதானத்தை திறந்தால் ரூ. 40க்கு தக்காளியை விற்பனையை செய்ய தயாராக உள்ளோம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பில்லை என்று அறிவித்துள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம். இருப்பினும், தமிழ் நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 29ம் தேதி அன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகி வருகிறது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் வெளியானது. இதுவரை இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 150 கோடி வசூல் செய்த்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது, அண்ணாத்த திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் சன்நெஸ்ட் ஒடிடி தளங்களில் வெளியீடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், ஜாதி-மத மோதலில் தொடர்புடையவர்கள் இதில் விடுவிக்கப்பட மாட்டார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் உடல் நலக்குறைவு காரணமாக, மே மாதம் 28-ந் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார். ஒவ்வொரு மாதமும் பரோல் காலம் முடியும் தருவாயில் மீண்டும் பரோல் நீட்டிக்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு மனு அளித்து வந்தார். அதன்படி 7 முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு, வரும் டிசம்ப்ர 7ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
ஆசிய அளவிலான பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாகவே முகேஷ் அம்பானி தான் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில், அதானி குழுமத்தின் பங்குகள் புதிய உச்சத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, அம்பானியை பின்னுக்குத் தள்ளி தற்போது ஆசியாவில் நம்பர் 1 பணக்காரராக உள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பும் தருவாயில் உள்ளன. சென்னையில் சமீபத்தில் பெய்த மழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாகி மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர். இந்நிலையில், வருகிற 27ஆம் தேதி முதல் டிசம்பர் 1 தேதிக்குள் சென்னையில் மிகப்பலத்த மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். 4 முதல் 5 நாட்களுக்கு இரவிலிருந்து அதிகாலை வரை பலத்த மழை பெய்யக்கூடும். சில நாட்களில் பகலிலும் பலத்தமழை பெய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் அனேக இடங்களில் இன்று காலை முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது