31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டி.பி.ஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற டிட்டோஜாக் இயக்கத்தினர் சுமார் 1500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பதவி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்வது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவது, ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்), தொடக்கக்கல்வி இயக்குநரகம் அமைந்துள்ள டி.பி.ஐ வளாகத்தை (பேராசிரியர் அன்பழகன் வளாகம்) ஜூலை 29 ஆம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
அதன்படி, திங்கட்கிழமை (ஜூலை 29) காலை 10 மணியளவில் டி.பி.ஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 1500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் டி.பி.ஐ வளாகத்தை நெருங்குவதற்கு முன்பாக அதன் அருகேயுள்ள பஸ் நிறுத்தத்திலேயே கைதுசெய்யப்பட்டு போலீஸ் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
மேலும், சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஆசிரியர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், “ஆசிரியர்களை இவ்வாறு முன்கூட்டியே கைது செய்வது ஜனநாயக விரோதமானது. கடந்த முறை 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டி.பி.ஐ வளாகத்தில் போராட்டம் நடத்தியபோது 12 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தொடக்கக்கல்வி இயக்குநர் உறுதி அளித்தார். ஆனால், இன்றுவரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது பதவி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைும் சேர்த்து 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளோம். இந்த அரசாணையால் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியைகள். எனவே, அரசாணை 243-ஐ உடனடியாக ரத்து செய்வதுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, ஊதிய முரண்பாடுகளை சரிசெய்வது உள்ளிட்ட இதர கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். உடனடியாக சங்க நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தனர் என தி இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.